புதுடெல்லி: சர்வதேச அளவில் பிரபலமானபெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், உள்ளூர் டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களின் விளம்பர வருவாயில் நியாயமான பங்கை செலுத்தும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நீண்டநாளாக ஆலோசிக்கப்பட்ட விஷயம் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அசல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், அதன் பயனை சொற்பமாக பெறும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கங்கள் மூலம் பெரும் லாபத்தை ஈட்டுகின்றன
இது தொடர்பாக, இந்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். பெரிய தொழில்நுட்ப சிலிக்கான் வேலி நிறுவனங்களான கூகுள் (யூடியூப்), மெட்டா (ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உரிமையாளர்), டிவிட்டர் மற்றும் அமேசான் ஆகியவை உள்ளூர் இந்திய வெளியீட்டாளர்களுக்கும் டிஜிட்டல் வெளியீட்டாளர்களுக்கும் பணம் செலுத்தும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களின் அசல் உள்ளடக்கத்திற்கான வருவாயில் ஒரு பங்கு கிடைக்கும் என்ற நிலைமை உருவாவது இந்திய பாரம்பரிய செய்தி வெளியீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும்.
மேலும் படிக்க | கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் உளவு செயலி - உடனே டெலிட் செய்யுங்கள்
இதுவரை, இது தொடர்பான சட்டங்கள் போதுமான தீவிரத்துடன் இல்லாததால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்தி தளங்களுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்த்துவந்தன. ஒளிபுகா விளம்பரப் பகிர்வு வருவாய் மாதிரிகள் (opaque ad-sharing revenue models) மூலம், விளம்பர வருவாயின் பெரும் பகுதி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே கிடைத்து வந்தது. இதனால், டிஜிட்டல் வெளியீட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் பெரும்பாலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இது தொடர்பான, முரண்பாடுகளை சரிசெய்ய புதிய விதிகளை உருவாக்குவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
தற்போது தொழில்நுட்ப ஜாம்பவான்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் விளம்பரத்தின் சந்தை சக்தி, இந்திய ஊடக நிறுவனங்களுக்கு பாதகமான நிலையில் உள்ளது. இது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கை, செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை
மக்களை இணைக்கும் தளமாக பேஸ்புக் சமூக ஊடகங்களில் தனது தொடங்கியிருந்தாலும், தற்போது செய்திகள் மற்றும் பிற ஊடக உள்ளடக்கங்களைப் பகிர்வதற்கான இடமாக உருமாறிவிட்டது. அதேபோல, கூகுள் இப்போது ஒரு தேடுபொறி மட்டுமல்ல, செய்திகளைப் பகிர்வதற்கான முக்கிய தளமாக வேர் விட்டு கிளை பரப்பியுள்ளது.
செய்தி இணையதளங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ட்ராஃபிக், கூகுள் மூலமாகவே செல்வதாக டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் (Digital News Publishers’ Association (DNPA)) கூறுகிறது. கூகுள், அதன் விளம்பர-வருவாய்க் கொள்கைகளைப் போலவே, ஒரு குறிப்பிட்ட செய்தி சேனல் இணையதளத்தை பட்டியலில் மேலே தள்ளும் அல்காரிதம்களையும் வைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஏற்கனவே செய்திகளின் அசல் உள்ளடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திவரும் நிலையில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியில், ஆக்கப்பூர்வமான சட்டம் உருவானால், அது இந்திய செய்தி வெளியீட்டாளர்களுக்கு நல்வாய்ப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | கூகுள், அமேசான், ஏர்டெல்... ஐபிஎல் உரிமையை கைப்பற்றப்போவது யார்?
கூகுள் மற்றும் பிற தொழில்நுட்ப தளங்கள், உள்ளூர் செய்தி படைப்பாளர்களுடன் தங்கள் லாபத்தை பிரித்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான சட்டங்களை ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கனடா மற்றும் இங்கிலாந்தும் இதேபோன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றன.
இருப்பினும், தென் அமெரிக்க நாடான பிரேசில் 'இணையத்தில் சுதந்திரம், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான பிரேசிலிய சட்டத்தை' கொண்டு வந்தபோது, கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்தி வெளியீட்டாளர்களுக்கு, அவர்களின் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், இந்தியாவின் போட்டி ஆணையம் (சிசிஐ) ஏற்கனவே கூகுளின் பாரபட்சமான கொள்கைகளுக்கு கண்டங்களை தெரிவித்து, அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு செய்தி உள்ளடகத்தின் லாப பகிர்வு தொடர்பாக சட்டத்தை கொண்டுவருவது தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை மேலும் ஆழமாக்கும் என்றும், அதன் பலன், இந்திய பாரம்பரிய செய்தி வெளியீட்டாளர்களுக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Xiaomi-ன் சூப்பரான பேட்டரி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR