அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார், அதற்காக தேசிய அளவில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்!
அமெரிக்காவின் தெற்கு எல்லையில், மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர் தினம் குடியேறி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். எனவே எல்லையில் பெரும் சுவர் கட்ட உள்ளதாகவும், அதற்கு மெக்சிகோ நிதி வழங்கும் என ட்ரம்ப் கூறிய நிலையில், மெக்சிகோ மறுத்ததால், தற்போது இதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் நிதி ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவந்தார். ஆனால், ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட முடியாது என கூறி, நாடாளுமன்றம் நிதி ஒதுக்க மறுத்துவிட்டது.
எல்லைச்சுவருக்காக சுமார் $500 கோடி நிதி ஒதுக்கக் கோரிய ட்ரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்காத நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்க அரசின் சம்பள பட்ஜெட்டை முடக்கி, Shutdown என்னும் அரசு முடக்க நிலையை பிரகடனம் செய்தார். 3 வாரமாக தொடர்ந்து நடைமுறையில் இருந்த முடக்கநிலை காரணமாக சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அரசு துறைகளை ட்ரம்ப் செயல்படாமல் வைத்திருந்த நிலையில், அவரது நடவடிக்கைகளின் மீது அதிருப்தி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது அரசு தொடர்ந்து இயங்க, புதிய பட்ஜெட்டை நாடாளுமன்றம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது. இந்தமுறையும் சுவருக்காக அதில் நிதி ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், தேசிய அளவில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி, எல்லைச் சுவர் கட்ட உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்டப்படி, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால், இந்தியாவை போல அதிபருக்கு அதீத அதிகாரங்களோ சட்ட ஒழுங்கின் மீது முழு கட்டுப்பாடோ கிடைக்காது. என்றபோதிலும் எல்லைச் சுவர் கட்டுவதற்காக பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி அதிபர் ட்ரம்ப்பால் நிதி திரட்ட முடியும். இதன் காரணமாக ட்ர்மப்பின் இந்த முடிவுக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது!