Union Budget 2025: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அவர் வழங்கியுள்ளார். புதிய வரி முறையில், வரிச் சலுகை வரம்பை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக அவர் உயர்த்தியுள்ளார். பட்ஜெட்டுக்கு முன்னர் இந்த வரம்பை அரசு ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்த நிலையில், இது 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வந்துள்ளது.
ரூ.12 லட்சம் அல்ல, ரூ.12,75000 வரை வரி இல்லை
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை உள்ளவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில், வரி விலக்கு வரம்பான ரூ.12 லட்சத்துடன் நிலையான விலக்கு வரம்பான ரூ.75,000 -ஐயும் சேர்த்தால், ரூ.12,75000 வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
ஆனால், ஊடகங்களில் ரூ.4 லட்சம் வரை வரி இல்லை என்றும், ரூ.4-8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு, 5% வரி என்பதில் தொடங்கி ரூ.24 லட்சம் முதல் 30% என்ற ஒரு வரி அடுக்கு அட்டவணையையும் காண்கிறோம். இது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.
இவர்களுக்கு வரி கணக்கீடு மாறும்
நிதியமைச்சர் சீதாராமன் வரி அடுக்குகளில் மாற்றங்களை அறிவித்தார். 12 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என அவர் தெரிவித்தார். ஆனால், ஆண்டுக்கு ரூ.12.75 க்கு (ஸ்டான்டர்ட் டிடக்ஷனுடன் சேர்த்து) மேல் சம்பாதிப்பவர்களுக்கு புதிய வரி அடுக்குகள் பொருந்தும். அதாவது நிதியமைச்சர் அடிப்படை விலக்கை உயர்த்தவில்லை, வரிச் சலுகை வரம்பைதான் உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் படி, உங்கள் ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சத்தைத் தாண்டினால், புதிய மதிப்பீட்டு ஆண்டில் புதிய அடுக்குகளின் அடிப்படையில் வரிகள் கணக்கிடப்படும்.
- தனிநபரின் மொத்த வரி வருமானம் ரூ.12 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளதால், வரி விலக்கு காரணமாக இந்த வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது. இதற்கு காரணம் வரிச்சலுகை (Tax Rebate), வரி விலக்கல்ல (Tax Exemption) என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
- வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.12 லட்சத்தை தாண்டினால், முழு வருமானத்திற்கும் வருமான வரி புதிய அடுக்குகளின் விகிதங்கள் பொருந்தும்.
தற்போது மாற்றப்பட்டுள்ள வரி அடுக்குகளின் படி, ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி ஏதும் இல்லை. ரூ.4 முதல் 8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி, ரூ.8-12 லட்சம் வரை வருமானத்திற்கு 10 சதவீத வரி, ரூ.12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரி, ரூ.16 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரி, ரூ.20-24 லட்சம் வரை வருமானத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும், ரூ.24 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும்.
New Tax Slabs for New Tax Regime: புதிய வரி முறைக்கான புதிய வரி அடுக்குகள்
ரூ. 4 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.4 முதல் 8 லட்சம் - 5%
ரூ.8 முதல் 12 லட்சம் - 10%
ரூ.12 முதல் 16 லட்சம் - 15%
ரூ.16 முதல் 20 லட்சம் - 20%
ரூ.20 முதல் 24 லட்சம் - 25%
ரூ.24 லட்சத்தை விட அதிக வருமானத்திற்கு - 30%
மாற்றப்பட்டுள்ள இந்த அடுக்குகள், ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கும் சிறிய நிவாரணத்தை அளித்துள்ளது. இது புதிய வரி முறையின் கீழ் வருபவர்களின் கைகளில் அதிக செலவழிக்கக்கூடிய வருமானம் இருப்பதை உறுதி செய்யும்.
இன்றைய அறிவிப்புக்கு பிறகு யாருக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்?
- புதிய வரி முறையில், ரூ.12 லட்சம் வருமானம் கொண்ட வரி செலுத்துபவருக்கு ரூ.80,000 வரிச் சலுகை கிடைக்கும்.
- ரூ.18 லட்சம் வருமானம் உள்ளவருக்கு ரூ.70,000 வரிச் சலுகை கிடைக்கும்.
- ஒரு வருடத்திற்கு ரூ.25 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் இப்போது ரூ.1.1 லட்சம் (கட்டண வரியில் 25%) சேமிக்கலாம்.
புதிய வரி முறையில் தற்போதுள்ள வரி அடுக்குகள் இவை:
0-ரூ.3 லட்சம்: வரி இல்லை
ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை: 5%
ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை: 10%
ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை: 15%
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை: 20%
ரூ.15 லட்சத்திற்கு மேல்: 30%
புதிய மதிப்பீட்டு ஆண்டில் படிப்படியாக இந்த அடுக்குகள் நீக்கப்படும்.
Old Tax Regime: பழைய வரி முறை
பழைய வரி முறையில் எந்த வித மாற்றங்களும் அறிவிக்கப்படவிலை. வரி அடுக்குகள் முன்னர் இருந்தபடியே தொடர்ப்படுகின்றன.
மேலும் படிக்க | Budget 2025: மருந்துகளின் விலை குறைப்பு... சிகிச்சை செலவு குறையவும் நடவடிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ