ஆசை காட்டி மோசம் செய்யும் Intraday Trading: SEBI ஆய்வில் வெளிவந்த ஷாக்கிங் தகவல்

Stock Marcket: FY23 -இல், பங்குச்சந்தையின் ஈக்விடி கேஷ் பிரிவில் முதலீடு செய்த தனிப்பட்ட இண்ட்ராடே முதலீட்டாளர்களில் 70% -க்கும் அதிகமானோர் நஷ்டத்தை எதிர்கொண்டார்கள். நஷ்டத்தை சந்தித்தவர்களில் 76% முதலீட்டாளர்கள் 30 வயதிற்கும் குறைவானவர்கள்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 25, 2024, 02:48 PM IST
  • வயதிற்கும் பங்குச்சத்தைக்கும் உள்ள வினோத தொடர்பு.
  • SEBI நடத்திய ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்ன?
  • SEBI ஆய்வில் வெளிவந்த சுவாரசியமான விஷயங்கள் என்ன?
ஆசை காட்டி மோசம் செய்யும் Intraday Trading: SEBI ஆய்வில் வெளிவந்த ஷாக்கிங் தகவல் title=

Stock Marcket: குறைந்த காலத்தில் அதிக லாபம், விறுவிறுப்பை கூட்டும் சந்தை ஏற்ற இறக்கங்கள், வீட்டிலிருந்தே பணம் ஈட்ட சுலபமான வழி, இப்படி பல காரணங்களால் பங்குச்சந்தை இன்று பொதுமக்களிடம் பிரபலமாகி வருகின்றது. முன்னர் மிக குறைந்த அளவிலான மக்களே ஆர்வம் காட்டிய பங்குச்சந்தையில் இன்று இளைஞர்கள், முதியவர்கள், கிராமம், நகரம், ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பங்கெடுத்து வருகிறார்கள்.

நீங்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளீர்களா? அல்லது, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கை திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு சுவாரசியமான செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2023 நிதியாண்டில் (FY23), பங்குச்சந்தையின் ஈக்விடி கேஷ் பிரிவில் முதலீடு செய்த தனிப்பட்ட இண்ட்ராடே முதலீட்டாளர்களில் 70% -க்கும் அதிகமானோர் நஷ்டத்தை எதிர்கொண்டார்கள் என்ற திடுக்கிடும் செய்தியை மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரான SEBI வெளியிட்டுள்ளது. செபி நடத்திய ஆய்வு ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு அதிர்ச்சியும் உள்ளது. நஷ்டத்தை சந்தித்தவர்களில் 76% முதலீட்டாளர்கள் 30 வயதிற்கும் குறைவானவர்கள்!! இது அதிர்ச்சி மட்டுமின்றி ஒரு வகையான எச்சரிக்கையையும் நமக்கு அளிக்கின்றது.

வயதிற்கும் பங்குச்சத்தைக்கும் உள்ள வினோத தொடர்பு

செபி மூலம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் ஒரு சுவாரசியமான அம்சமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரே நாளில் வாங்கி விற்கும் (Buy and Sell) முறையான இண்ட்ராடே ட்ரேடிங்கில்  (Intraday Trading) நேர்மாறான விகிதாசார முறை காணப்படுகின்றது. அதாவது, சிறு வயதினருக்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகமாகவும் முதியவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறைவாகவும் உள்ளது. வயதோடு வரும் ‘பக்குவம்’ இங்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. 

SEBI ஆய்வின் படி, FY23 இல், 
- 60 வயதுக்கு மேற்பட்ட வயது வரம்பில் வருபவர்கள் மிகக் குறைந்த நஷ்டத்தை எதிர்கொண்டனர் (53%)
- 30 வயதிற்குட்பட்ட வயது வரம்பில் வருபவர்கள் மிக அதிக நஷ்டத்தை எதிர்கொண்டனர் (81%)

ஈக்விட்டி மார்கெட்: SEBI நடத்திய முக்கிய ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்

- SEBI -இன் இந்த ஆய்வை கல்வியாளர்கள், தரகர்கள் மற்றும் சந்தை வல்லுநர்களால் மதிப்பாய்வு செய்துள்ளனர். 

- ஜூலை 24 அன்று வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான SEBI, FY23 -இல் ஈக்விட்டி கேஷ் பிரிவில் இன்ட்ராடே டிரேடிங்கில் பங்கேற்ற முதலீட்டாளர்களின் எண்ணிக்கை FY19 இல் இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

- கொரோனா தொற்றுநோய்க்கு முன்னரும், அதற்கு பின்னும் இருந்த போக்குகளை ஒப்பீட்டளவில் பகுப்பாய்வு செய்ய, செபி ஆய்வு FY19, FY22 மற்றும் FY23 ஆகிய காலங்களை உள்ளடக்கி நடத்தப்பட்டது. 

- டாப்-10 பங்கு தரகர்களின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் இந்த ஆய்விற்கான சேம்ப்ளிங்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. 

SEBI ஆய்வு: வெளிவந்த சுவாரசியமான விஷயங்கள்:

- ஈக்விட்டி ரொக்கப் பிரிவில் (Equity Cash Segment) வர்த்தகம் செய்யும் மூன்று நபர்களில் ஒருவர், இன்ட்ராடே ட்ரேடிங்கில் பங்குகொள்கிறார்கள்.

- 2018-19 ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 2022-23 நிதியாண்டில் 30 வயதிற்கு குறைவான இளம் முதலீட்டாளர்களின் பங்களிப்பு வர்த்தகத்தில் 40% அதிகரித்துள்ளது. 

- அதிக டிரேடிங், அதாவது ஒரு ஆண்டுக்கு 500 -க்கும்  மேற்பட்ட முறை டிரேடிங் செய்யும் ட்ரேடர்களில், நஷ்டத்தை எதிர்கொண்டவர்களின் விகிதம் 80% ஆக அதிகரித்துள்ளது.

- மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது, ​​30 வயதுக்குக் குறைவான இளைய வர்த்தகர்களிடையே நஷ்டத்தின் அளவு அதிகமாக உள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் இது 76% ஆக இருக்கின்றது. 

- லாபம் ஈட்டுபவர்கள் செய்யும் பங்கு வர்த்தகங்களை விட நஷ்டம் ஈட்டுபவர்கள் செய்யும் வர்த்தகங்கள் அதிகமாக இருந்தது.

- நஷ்டத்தை எதிர்கொண்டவர்கள், தங்கள் வர்த்தக இழப்புகளில் 57% -ஐ வர்த்தக செலவுகளாக செலவழித்தனர். எனினும், லாபம் ஈட்டியவர்கள் தங்கள் வர்த்தக லாபத்தில் 19% -ஐ வர்த்தகச் செலவுகளாகச் செலவழித்துள்ளனர். 

மேலும் படிக்க | டிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ

பங்குச்சந்தையில் உங்கள் பங்கு

SEBI மூலம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பல பாடங்களை புகட்டியுள்ளது. குறிப்பாக இளைய சமுதாயம் இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். புதிய வழிகளில் பணம் ஈட்ட முயற்சிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், புதிதாக எதை செய்வதானாலும், அதை பற்றிய ஆராய்ச்சி, அடிப்படை அறிவு, போதுமான பேக்-அப், எதிர்பாராத நஷ்டங்களை சமாளிக்கும் திறன் ஆகியவை இருப்பதை கண்டிப்பாக உறுதி செய்துகொள்ள வேண்டும். 

குறிப்பாக, ஈக்விடி சந்தையில் புதிதாக வர்த்தகம் செய்யும் இளைஞர்கள் துவக்கத்தில்லேயே இண்ட்ராடே ட்ரேடிங் செய்வதை தவிர்த்து, லாங்-டர்ம் முதலீடுகளில் கவனம் செலுத்தலாம் என சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து சில வாரங்களுக்கு இண்ட்ராடே ட்ரேடிங் போக்கை கவனித்து அதன் பின்னர் அதில் வர்த்தகம் செய்யத் தொடங்கலாம். ஏனெனில், இதில் அதிக லாபம் வரும் அதே வேளையில் நஷ்டத்திற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளன. 

பங்குச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் மீன் பிடிக்கலாம், மூழ்கி முத்தெடுக்கலாம், சிலர் புயலிலும் சிக்கிக்கொள்ளலாம். பேராசை இல்லாமல், நியாயமான ஆசைகளுடனும், போதுமான புரிதலுடனும், எச்சரிக்கையுடன் இதில் பயணித்தால் சீரான லாபம் காணலாம். 

(இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகின்றது.)

மேலும் படிக்க | Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News