மதுரை மாநகரில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா விமர்சையாக நடைப்பெற்றது.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரசித்திப்பெற்ற சித்திரை திருவிழாவானது இந்தாண்டு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சுந்தரேஸ்வரரும் - மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சிக்கு பாட்டாபிஷேகம் கடந்த 25-ஆம் தேதி நடைப்பெற்றது., பின்னர் 26-ஆம் நாள் திக்கு விஜயமும் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.
இதற்கிடையே, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள் தங்கப் பல்லக்கில் நேற்று முன்தினம் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுடுத்தி கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி கள்ளந்திரி அப்பன் திருப்பதி கடச்சனேந்தல் வழியாக நேற்று மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தடைந்தார்.
பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தடைந்தார். அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில், இன்று காலை தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இந்நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷமிட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இத்திருவிழாவில் பங்கேற்க மதுரை மட்டும் அல்லாமல் திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் வைகை ஆற்றங்கரையில் குவிந்திருந்தனர்.