காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது!
'அன்றாடப் பணிகள்' என்கிற அசுரன் நம் தினத்தைக் காவு வாங்கக் காத்திருக்கும் காலைப் பொழுதில் பலருக்கும் மார்னிங் டிபன் என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. ` பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்!', `ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்!', `காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்!'... திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அப்படிச் சாப்பிடுபவை சத்தானவையாக இருப்பது சிறந்தது.
நம்மில் சிலர் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவோம். அப்படி தவிர்ப்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து சர்வதேச அளவில் ஒரு லட்சம் பேரிடம் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இதில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர். வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கிராமப்புற மக்களை விட நகர்புற மக்களே அதிக அளவில் காலை உணவை தவிர்க்கின்றனர். நீரிழிவு நோய் ஏற்பட காலை உணவை தவிர்ப்பதும் ஒரு காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. நீரிழிவு நோயை தடுக்க தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.