மேற்கு வங்கம் கிராமப்புறங்களில் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்!
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டும் திட்டம், தனிநபர் மற்றும் சமுதாய கழிப்பறைகள் கட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
நாட்டில் இதற்குமுன்பு இமாச்சல பிரதேசம், சிக்கிம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலங்கள் என அறிவிக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முற்றிலுமாக இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "கிராமப்புற மேற்கு வங்கத்தில் உள்ள சுமார் 1.35 கோடி குடும்பங்களும் 'மிஷன் நிர்மல் பங்களா' திட்டத்தின் மூலம் இணைக்கப்பட உள்ளன. திறந்தவெளி கழிப்பிட ஒழிப்பை இலக்காகக் கொண்ட இத்திட்டம் வரும் அக்டோபர் 2-க்குள் வெற்றிகரகமாக நிறைவேற்றப்பட உள்ளது.
I'm delighted to announce that rural Bengal is now open defecation free. Here is my Facebook post pic.twitter.com/KDVI2Ea3i3
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2019
கிராமப்புற மேற்கு வங்கம் இப்போது திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
நமது சாதனையை இந்திய அரசும் உறுதிபடுத்தியுள்ளது. நமது இலக்கு, தூய்மை, பசுமையான சூழல், மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. நமது அடுத்த இலக்கு திடக்கழிவு மேலாண்மையை ஏற்படுத்துவது'' என குறிப்பிட்டுள்ளார்.