காஃபி காதலர்களுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது. காஃபி பழக்கத்தால் பல கேட்ட விசயங்கள் இருந்தாலும் அதில் சில நல்ல விஷயங்களும் அடங்கியுள்ளது. ஒரு நாளுக்கு இரண்டு முறை காஃபி குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது.
அப்படிக் குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் காஃபி குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்குமாம். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் காஃபி குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.
காஃபி குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியை அனைவரும் கேள்விப் பட்டிருப்போம் அல்லவா. காஃபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிடும்.
அளவுக்கு அதிகமாகக் காஃபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காஃபியின் அளவு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
UK தேசிய சுகாதார சேவை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 200mg காஃபி மட்டுமே அருந்துமாறு கூறுகின்றனர். ஏனென்றால், காஃபியில் கருச்சிதைவை உண்டாக்கும் ஆபத்து உள்ளதாக கூறுகின்றனர்.