மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக குற்றம் சாட்டும் அனைத்து கட்சிகள், தலைவர்கள் அதை நிரூபிக்க முடியுமா என தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
இந்திய தேர்தல்களில் இப்போது வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஏற்கெனவே புரோக்கிராமிங் செய்யப்பட்டவை என்பதால், ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்குகள் விழும்படி தொழில்நுட்ப மோசடி நடந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இதுகுறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமும் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 17 முக்கிய எதிர்க்கட்சிகளும் புகார் அளித்துள்ளன. இதனால், மின்னணு எந்திரங்கள் மூலம் மத்திய மாநில ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக தில்லு முல்லு நடக்கிறதோ என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக கட்சிகள் நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம். மே மாதம் முதல் தேதியிலிருந்து தொடர்ந்து 10 நாட்களுக்குள் துறை சார் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகளைக் கொண்டு இந்த மின்னணு எந்திரங்களைச் சோதனையிட்டு, அதில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பிருப்பதை நிரூபித்துக் காட்டட்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.