புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியை சி.பி.ஐ கைது செய்தது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் நவீன ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லாண்ட் என்ற நிறுவனத்துடன் 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துக்காக, இந்தியாவை சேர்ந்த சில வி.ஐ.பி.,க் களுக்கு, இத்தாலி நிறுவனம், 360௦ கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சி.பி.ஐ. அமைப்பு 100க்கும் மேற்பட்டோருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை குறித்து சம்மன் அனுப்பி விசாரனை நடத்தியது.
இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி தியாகி உள்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி., தியாகியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தியாகி உள்ளிட்ட மூன்று பேரை இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை 10 நாட்கள் காவரில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி சி.பி.ஐ. தரப்பில் கேட்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தியாகி உள்ளிட்ட 2 பேரையும் டிசம்பர் 14-ம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.