பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் வருடத்திற்கு ரூ. 8 இலட்சத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் மற்றும் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், இந்த இட ஒதுக்கீடு தகுதியானவர்கள் ஆவார்கள். தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இன்று இந்த மாசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தருவதாக, அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் பேசிய மாயாவதி கூறியதாவது:
10 சதவீத இட ஒதுக்கீடு என்பது பிஜேபியின் "அரசியல் ஸ்டண்ட்". மக்களவை தேர்தல் வர உள்ள நேரத்தில், இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தது என்பது வெறும் அரசியலுக்காகவே மட்டுமே, மற்றபடி பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினர் மீது அக்கறை ஒன்றும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இது அரசியல் தந்திரம் மட்டுமே. மக்களவை தேர்தல் வருவதற்கு முன்பே நல்ல முடிவு என்று கூறலாம். பா.ஜ.க. தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருந்தால், அது நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார் பிஎஸ்பி தலைவர் மாயாவதி.
பொருளாதாரரீதியில் பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.