டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் அதிவேக ரயில் பயணத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
மிஷன் ரப்தார் திட்டத்தின்படி பல்வேறு விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதுடெல்லி-ஹவுரா மற்றும் புதுடெல்லி -மும்பை இடையிலான பயண நேரத்தை மூன்று மணி நேரம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் மூலம் இனி மும்பை-டெல்லி இடையிலான பயணம் 12 மணி நேரத்தில் சாத்தியமாகும்.
மேற்குறிப்பிட்ட இந்த வழிதடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திற்கு ரயில்களை இயக்குவதற்காக 6,800 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியால் வேகத்தை அதிகரிப்பது, பாதுகாப்பு, சேவை, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுத்தப்பட உள்ளன. இத்தடத்தில் உள்ள அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளையும் மூடுவதற்கும் தனி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
---‘மிஷன் ரப்தார்’---
‘மிஷன் ரப்தார்’ என்ற திட்டம் 2016-17 ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சரக்கு ரெயில்களின் வேகம் 5 ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காகவும், பயணிகள் ரெயில்கள் 25 கி.மீ. வேகமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.