மக்களவை தேர்தல் 2019 முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பொருத்த வரை மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு (ஈ.வி.எம்.) இயந்திரத்தில் பழுது ஏற்ப்பட்டதால், ஜனசேனா எம்.எல்.ஏ. வேட்பாளர் மதுசூதன் குப்தா இயந்திரதை கீழே தூக்கி போட்டு உடைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வு நடந்துள்ளது. அதாவது ஆந்திரப் பிரதேசத்தில் பண்டார்பள்ளியில் உள்ள புத்துலபட்டு தொகுதியில் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதேபோல அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி தொகுதிக்குட்பட்ட வீராபுரத்திலும் இரு கட்சியினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இந்த மோதல் சம்பவத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.