கொரோனா பிரச்னை சரியாகும் வரை ஆயுதங்களை கொள்முதல் செய்ய வேண்டாம் என முப்படைக்கழுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடிதம்!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தவிர்க்க மே 3 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முப்படைகளுக்கு தேவையான ஆயுத கொள்முதல் நடைமுறைகளை நிறுத்திவைக்கும்படி பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பிரச்சனை சரியாகும் வரை பல்வேறு நிலைகளில் உள்ள ஆயுத கொள்முதல் நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி முப்படைகளுக்கு பாதுகாப்புத் துறை சார்பில் கடிதம் எழுதியுள்ளது. அதில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக அதிக அளவில் நிதி செலவிடப்படுவதால், தற்போது ஆயுத கொள்முதல் நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து முப்படைக்கழுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.... கொரோனா பாதிப்பு உள்ளவரை, ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறுத்திவைக்க தெரிவித்துள்ள ஆயுத கொள்முதல் திட்டங்கள் பல நிலைகளில் உள்ளன. பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து S400 ஏவுகணைகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து டாங்கிகள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளையும் இந்திய ராணுவம் வாங்குகிறது. அதே நேரத்தில் கடற்படை சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து 24 மல்டிரோல் சாப்பர்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
COVID-19-யை எதிர்த்துப் போராடுவதற்கும், தொற்றுநோய் வெடிக்கும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பல கோடி மக்களுக்கு உணவளிப்பதற்கும் அரசாங்கத்தால் பெரும் செலவுகள் செய்யப்படுகின்றன.
நிலைமையை சமாளிக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பு உட்பட அனைத்து அமைச்சுகளும் சீனாவில் தோன்றிய நோயை எதிர்த்துப் போராடுவதற்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை எதிர்பார்க்கின்றன.