வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி..!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் மூன்று முறை தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் தங்களது குற்றப்பிண்ணனி குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் போட்டியிடுவதை தடுப்பதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது தங்களது குற்றப்பின்னணி குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ALSO READ | ஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி?
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியை, வேட்பாளர்களை பரிந்துரைக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக இந்த தார்மீக அளவுகோலுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் வலியுறுத்துகிறது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் படி விளம்பரத்திற்கான திருத்தப்பட்ட காலக்கெடு...
(i) முதல் விளம்பரம்: வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட கடைசி 4 நாட்களுக்குள்.
(ii) இரண்டாவது விளம்பரம்: வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட கடைசி தேதியிலிருந்து 5 முதல் 8 வது நாளுக்குள்.
(iii) மூன்றாவது விளம்பரம்: 9 வது நாள் முதல் பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை, அதாவது வாக்கெடுப்பு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு.
இந்த காலக்கட்டங்களில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களை பற்றி அதிக தகவல்களை அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். ஒருவேளை போட்டியே இல்லாமல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களை பரிந்துரைக்கும் அரசியல் கட்சிகளும், வெற்றி பெற்ற வேட்பாளர்களும் குற்றப்பின்னணியை மக்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் அப்போதும் விளம்பரப்படுத்த வேண்டும்.