முகலாய மன்னர் ஷாஜகானின் பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது!
தலைநகர் புதுடெல்லி அருகேயுள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் தாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை மனைவி மும்தாஜின் நினைவாக 17-ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய முகலாய மன்னர் ஷாஜஹான். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ‘உருஸ் விழா’ நடத்தப்பட்டு அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஷாஜஹானின் 319-வது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் இந்த ஆண்டும் அவரது சமாதியில் 3 நாட்கள் ‘உருஸ் விழா’-வாக கொண்டாடி மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும், 4-ஆம் தேதி நாள் முழுவதும் பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.