இன்று (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் தனி செயலாளர் (ஓ.எஸ்.டி) பிரவீன் கக்கார் மற்றும் முக்கிய அதிகாரிகளின் அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது, எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வருமான வரித்துறையினர் தங்களுடன் சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்களையும் அழைத்து வந்துள்ளனர்.
நமக்கு கிடைத்த தகவலின் படி சி.ஆர்.பீ.எப் வீரர்கள் இந்தூரில் உள்ள முதல் அமைச்சர் கமல் நாத்தின் ஓ.எஸ்.டி வீட்டைச் சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
அதிகாலை சுமார் 3 மணியளவில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு கிட்டத்தட்ட 74 இடங்களில் சோதனை செய்தனர். விஜய் நகர் ஷோரூம் உள்ளிட்ட மற்ற இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பிரவீண் போலிஸ் அதிகாரியாக இருந்தபோது அவருக்கு எதிராக பல வழக்குகள் இருந்தன. அதுக்குறித்து தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து 2018 டிசம்பர் மாதம் முதல் பிரவீன் கக்கார் முதல்வர் கமல்நாத்தின் தனி செயலாளராக(ஓ.எஸ்.டி) செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.