மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இந்தியாவின் பாரம்பரியக் கலையான யோகாவை ஐ.நா. அங்கீகரித்தது. இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி சண்டிகரில் நடந்த யோகா நிகழ்சியில் கலந்துக்கொண்டார். அவர் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்காக வந்திருந்தவர்கள் இடையே அவர் பல்வேறு விதமான ஆசனங்களையும் செய்து காண்பித்தார்.
பிரதமர் மோடி பேசியதாவது:-
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிறந்த சிகிச்சை யோகாதான். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யோகாவின் உதவியுடன் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.இந்த உலகில் காசு செலவில்லாமல் ஆயுள் காப்பீடு எதையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் காசே செலவு செய்யாமல் உடல் நலத்தை பேண முடியும் என்றால் அதை யோகாவால் நிறைவேற்றலாம் என்று உறுதியாக கூறலாம். யோகா மதம் சார்ந்த நடவடிக்கை அல்ல. அது உயிர் அறிவியலை சார்ந்தது. ஒழுக்கத்தை கற்றுத்தருவதுடன் மனதையும், மூளையையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வைக்கிறது. யோகாவில் ஏழை, பணக்காரர் என்ற பேதம் கிடையாது, யார் வேண்டுமானலும் யோகா செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். எனவே வாழ்வில் அன்றாடம் யோகா பயிற்சியை மேற்கொள்வோம். யோகாவின் மூலம் நாட்டின் சுகாதார நடவடிக்கைகளுக்கான செலவுகளை நம்மால் குறைத்திட இயலும்.
இந்த உலகிற்கு யோகா என்னும் பாரம்பரிய மதிப்பு மிக்க கலையை இந்தியா வழங்கி இருக்கிறது. அதை இந்த உலகம் தங்களுடைய வழியில் ஏற்றுக்கொண்டு இருக்கிறது.இந்தியா தனது பங்கிற்கு யோகா கலையை மேம்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு முதல் 2 விருதுகளை வழங்கும். அடுத்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் போது, யோகா கலையில் சிறந்த பங்காற்றியதற்காக சர்வதேச அளவில் ஒரு விருதும், நமது நாட்டில் யோகா கலையில் சிறந்த பணியாற்றுபவர்களுக்காக தேசிய அளவில் ஒரு விருதும் வழங்கப்படும் என மோடி பேசினார்.