கர்நாடக விவகாரம்: கடும் அமளி; நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டு கடும் அமளியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Last Updated : Jul 9, 2019, 03:36 PM IST
கர்நாடக விவகாரம்: கடும் அமளி; நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைப்பு title=

புதுடெல்லி: கர்நாடகத்தில் முதல் அமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த கூட்டணி ஆட்சி அமைத்ததில் இருந்தே காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி இடையே அதிருப்தி நிலவி வந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ. என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்புக்கு முக்கிய காரணம் பாஜக என்று கூறப்படுகிறது. அதாவது பாஜக நிர்வாகிகள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.-க்களிடம் பேரம் பேசி வருவதால், எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், அவரை தங்கள் பக்கம் இழுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கவும், எடியுரப்பா தலைமையிலான ஆட்சி அமைக்கும் பாஜக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இன்று கர்நாடக அரசியலில் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது அவையின் இன்றைய அலுவல்களை நிறுத்தி வைத்துவிட்டு கர்நாடக பிரச்சனை குறித்து முதலில் விவாதிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், காங்கிரஸின் கோரிக்கையை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

இதனால் மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஒரு பக்கம் காங்கிரஸ் எம்பிக்களும், மற்றொரு பக்கம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

பின்னர் 12 மணிக்கு பிறகு அவை கூடியபோதும் மீண்டும் இரண்டு கட்சி எம்பிக்கள் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதால், துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார். பிறகு 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால், நாளைவரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

Trending News