தனிப்பட்ட சந்திப்பை அரசியல் லாபத்திற்காக ராகுல் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது என கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்!
உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், பின்னர் அதை தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் மனோகர் பாரிக்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்... ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் உள்ளது என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், கணைய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை, நேற்று ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
கோவா சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று முதல்வர் மனோகர் பாரிக்கரை ராகுல் சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த சந்திப்பில் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து ராகுல் விசாரித்ததாக தெரிகிறது.
பின்னர் கேரளாவில் நடைப்பெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் புதிய ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாரிக்கர் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி - அம்பானி இடையிலான ஒப்பந்தம் எனவும் ராகுல் கூறினார்.
இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு மனோகர் பாரிக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... வேறுபட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வது நாகரிக அரசியலை வளர்க்கவே. அதன் அடிப்படையிலேயே ராகுல் என்னை சந்திக்க வந்ததாக எண்ணினேன். ஆனால் ராகுலின் சந்திப்பில் வேறு உள்நோக்கம் இருப்பது தற்போது தான் தெரியவந்தது. வெறும் 5 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில், ரபேல் குறித்து நாங்கள் எதையும் பேசவில்லை. ராகுலின் இந்த செயல் தன்னை வேதனையில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.