நித்யானந்தா ஆன்மிகச் சுற்றுலாவில் இருக்கிறார் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பாலியல், கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிவிட்டார். கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. அந்த நாட்டில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையில் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி, தில்லி சிபிஐ - இண்டர்போல் அலுவலகத்திற்கு குஜராத் மாநில போலீஸார் கடிதம் எழுதி இருந்தனர்.
அதை ஏற்று நித்தியானந்தாவுக்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நபர் இருக்கும் இடத்தை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்வதை இந்த புளூ கார்னர் நோட்டீஸ் கட்டாயமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனிடையே பாலியல் வன்கொடுமை புகாரில் நித்யானந்தாவின் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரும் வழக்கில் பெங்களூர் உயர் நீதிமன்றம், நித்யானந்தாவை ஆஜராகக்கோரும் சம்மனை அவரை நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என்றும், எனவே இதுகுறித்த அறிக்கையை திங்கள் அன்று சமர்பிக்க வேண்டும் எனவும் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நித்யானந்தா ஆன்மிகச் சுற்றுலாவில் இருக்கிறார் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.