230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் வெற்றி பெறுவது நாங்கள் தான் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார்!
நடந்து முடிந்த மத்திய பிரதேச தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைப்பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், முடிவுகள் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸுக்கு மாறி மாறி சாதமாகி வருகின்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்துள்ளார்.
மூன்று முறை மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த சிவராஜ் சிங் சௌகான், நான்காவது முறையாக முதல்வர் அரியணையில் அமர, எதிர்கட்சிகளுக்கு கடும் போட்டி அளித்து வருகின்றார். மறுமுனையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மல்லுகட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத்., மத்திய பிரதேச மாநிலத்தில் தாங்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்களை வெற்றியடைய செய்யும் என கமல் நாத் தெரிவித்துள்ளார். மேலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தொடர்பில் இருக்கும் கமல் நாத், தேர்தல் முடிவுக்கு பின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் வந்து இணையும் என நம்பிக்கை கொண்டுள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இம்மாநிலத்தில் பாஜக 165 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் 58 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.