காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு அமெரிக்காவை பிரதமர் மோடி கேட்கவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் மறுப்பு!!
ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசிய போது, காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யக் கோரியதாகவும், அதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானதையடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியது. அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பிடம் பேசவேயில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆணித்தரமாக மறுப்பும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இது குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கோரிக்கை வைக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் பிரச்சனையை இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளே பேசி தீர்க்க வேண்டும் என்பதே சிம்லா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். இதைத் தொடர்ந்தும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய நலன் ஆகியவை சம்பந்தப்பட்டது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக நாம் ஒருமித்த கருத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.