கடந்த சனவரி 23 ஆம் தேதி முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அன்று முதல் இவரைப்பற்றி தான் பேச்சு நடந்துக்கொண்டு இருக்கிறது. தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, இன்று "மிஷன் உத்தர பிரதேசம்" பிரசாரம் மூலம் நான்கு நாட்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் பிரியங்கா காந்தி முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார். அவர் லக்னோவில் உள்ள அமோசி விமான நிலையத்திலிருந்து காங்கிரஸ் அலுவலகம் சாலையோர பிரசரத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில், இன்று காலை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளமான ட்விட்டரில் @priyankagandhi என்ற முகவரியில் இணைந்தார் பிரியங்கா காந்தி. இதுக்குறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின்தொடர ஆரம்பித்தனர்.
கடந்த 9 மணி நேரத்தில் மட்டும் பிரியங்கா காந்தியை பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இன்னும் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.