Rahul Gandhi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டது. அதற்கு முன்பு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று அவையில் உரையாற்றியிருந்தார்.
அந்த வகையில்,
பிரதமர் மோடியின் பேச்சை முன்வைத்து காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் தனது இரண்டு மணி நேர உரையில் மணிப்பூருக்கு இரண்டு நிமிடங்களை மட்டுமே ஒதுக்கியதாக ராகுல் காந்தி அதில் குற்றஞ்சாட்டினார்.
"பிரதமர் நேற்று இரண்டு மணி நேரம் சிரித்து, நகைச்சுவையாக, கோஷங்களை எழுப்பி பேசியதை நான் பார்த்தேன். மணிப்பூர் மாநிலம் தீப்பற்றி எரிந்து பல நாட்களாகிவிட்டதை பிரதமர் மறந்துவிட்டார் போலும். நாடாளுமன்றத்தின் நடுவில் அமர்ந்திருக்கும் பிரதமர் வெட்கமின்றி சிரித்துக் கொண்டிருந்தார். பிரச்சினை காங்கிரஸோ நானோ அல்ல, மணிப்பூரில் என்ன நடக்கிறது, ஏன் அதைத் தடுக்கவில்லை என்பதே பிரச்சினை" என்று ராகுல் கூறினார்.
மேலும் அவர்,"பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டனர் என்ற கருத்து வெற்று வார்த்தைகள் அல்ல. மணிப்பூரில் பாஜகவால் இந்துஸ்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் தீயை அணைக்காமல், அது தொடந்து எரிய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்" என்று குற்றஞ்சாட்டினார். ராணுவத்தால் 2-3 நாட்களில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் ஆனால் அரசு அதை நிலைநிறுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
"கடந்த 19 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நான் எல்லா மாநிலங்களுக்கும் சென்று வருகிறேன். ஆனால் மணிப்பூரில் நாங்கள் கண்டதை நான் இதுவரை வேறெங்கும் பார்க்கவில்லை. ஒருவேளை, நான் அதை இப்போது சொல்லியே ஆக வேண்டும் என நினைக்கிறேன். நான் மெய்தே பகுதிக்கு சென்றபோது, எங்கள் பாதுகாப்பின் ஒரு பகுதியாக எந்த குக்கி இன மக்களையும் அழைத்து வர வேண்டாம் என கூறப்பட்டது. மெய்தே பகுதியில் குக்கிகள் இருந்தால் குக்கிகள் கொல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டது. குக்கி பகுதியிலும் இதே நிலைதான் இருந்தது. அதனால் மணிப்பூர் குகி,மெய்தி என பிரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் ஒரு மாநிலமாக இல்லை. இதைத்தான் நான் பாராளுமன்றத்தில் சொன்னேன்.
ஒருவர் பிரதமரானால், அனுபவமற்ற அரசியல்வாதியாக பேசக்கூடாது. காங்கிரஸ் கட்சியை, எதிர்க்கட்சியை, பிரதமர் மோடி 2 மணி நேரம் பேசுவதைப் பார்ப்பது சோகம், அவரது பதவிக்கு இது நியாயம் இல்லை.. நான் விரும்பும் ஒரே விஷயம் என்னவெனில், பிரதமரின் கையில் வன்முறையை கட்டுப்படுத்தும் கருவிகள் உள்ளன, ஆனால் சில காரணங்களால், அவர் அவற்றைப் பயன்படுத்த மறுக்கிறார். பிரதமர் மணிப்பூருக்குச் செல்லாததற்கு தெளிவான காரணங்களும் உள்ளன" என்று ராகுல் காந்தி அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ