புதுடில்லி: ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் கடவுள் ஜெகந்நாதரின் ரத யாத்திரை 2020 ஜூன் 23 அன்று தொடங்கியது. வழக்கமாக 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ஜெகந்தாதன் தனது அண்ணன் பலராமன் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் ரத உலா வருவதை காண்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி, பக்தர்களின் தரிசனத்திற்கான அனுமதி குறைந்தபட்ச பக்தர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.
உலகிலேயே மிகப் பழமையான ரத யாத்திரையாகக் கருதப்படும் பூரி ரத யாத்திரையானது, ஆண்டுதோறு ஆனி மாதம் வளர்பிறை இரண்டாம் நாள் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு நடைபெறுவது பூரியின் 143 வது ரத யாத்திரையாகும். ஆலய நகரமான பூரி மட்டுமல்ல, ஒடிசாவே ரத யாத்திரையின் போது திருவிழாக் கோலம் பூணும். ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதர சகோதரிகளின் மூன்று ரதங்களும் அளவு மற்றும் பிற விவரங்களில் பரஸ்பரம் வேறுபட்டவை. தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகாகவும் உள்ளார்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுகின்றன.
Also Read | virtual flower showவாக மக்களைக் கவரும் 124வது ஊட்டி மலர் கண்காட்சி
ஒடிசாவின் ஐதீகத்தின்படி இந்த வருடம் பூரி ஜகந்நாதர் தேரில் ஊர்வலமாக பவனி வரவில்லை என்றால், அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வர முடியாது என்று நம்பிக்கை உண்டு. எனவே உச்ச நீதிமன்றம் ரத யாத்திரை நடத்த வேண்டாம் என்று சொன்னதற்கு மேல் முறையீடு செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபன்னா அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அமர்வு விசாரித்து, ரத யாத்திரைக்கான தடையை திரும்பப்பெற்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்ககப்பட்டது.
ஜெகந்நாதரின் தேர் 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேராகும். 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் எனப்படும் பலராமரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவியும் நகர்வலம் வருவார்கள்.
Read Also | கணித மேதை 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்
பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் பொன்னாலான துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி சுத்தம் செய்வார். முதலில் மூத்த சகோதர பலராமரின் தேரும், அதன் பின்னர் தங்கை சுபத்திரை தேவியின் தேரும் நகர்வலம் தொடங்கும். இறுதியாக ஜெகந்நாதரின் ரதம் கிளம்பும்.
தங்கள் அத்தையின் இருப்பிடமான குண்டிச்சா ஆலயம் நோக்கிச் செல்லும் ரத யாத்திரையின்போது, மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் தங்கி ஓய்வெடுப்பார். அதன்பிறகு சகோதர சகோதரியின் தேர்கள் புடைசூழ ஜெகந்நாதரின் ரத யாத்திரை மீண்டும் கிளம்பி தங்கள் இருப்பிடமான ஜெகந்நாதர் கோயிலை வந்தடையும்.
ஒரு ஆண்டு பயன்படுத்தப்படும் தேர் மறு ஆண்டு பயன்படுத்தப்படுவதில்லை. ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய ரதங்கள் உருவாக்கப்படுகின்றன.