மத்திய அரசு ஊழியர்களின் 2 நாள் நாடுதழுவிய போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது!
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற கோரியும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று மற்றும் நாளை என 48 மணி நேர நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த நாடுதழுவிய போராட்டத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, AICCTU, UTUC, TUCC, LPF மற்றும் SEWA ஆகிய 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலுமிருந்து சுமார் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு சங்கங்களில் உள்ளவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
அதேவேலையில் இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதேபோல் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிகளில் 50,000-க்கும் அதிகமான காசோலை பரிவர்த்தனை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தை தவிர்த்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களும் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து சேவை பாதிக்கலாம் என தெரிகிறது. எனினும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு முன்னதாக எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது காவலர்கள் உதவியுடன் பேருந்துக்களை தமிழக அரசு இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள 33 பஸ் டெப்போக்கள் முன்பும் காவல்துறை பாதுகாப்பு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் போக்குவரத்து, வங்கி சேவை உள்பட அத்தியாவச சேவைகள் இந்த இரண்டு நாட்களில் பாதிக்கலாம் எனவே கருதப்படுகிறது.