Wrestlers' Protest: கங்கையில் தங்கள் பதக்கங்களை வீசும் முடிவை கைவிட்ட மல்யுத்த வீரர்கள்

Wrestlers Protest: மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசவில்லை. பஜ்ரங், சாக்ஷி, வினேஷ் தங்கள் பதக்கங்களை திகாயிடம் ஒப்படைத்தனர். மேலும் பிரச்னையை தீர்க்க மத்திய அரசுக்கு 5 நாள் கெடு.

Written by - Shiva Murugesan | Last Updated : May 30, 2023, 09:00 PM IST
Wrestlers' Protest: கங்கையில் தங்கள் பதக்கங்களை வீசும் முடிவை கைவிட்ட மல்யுத்த வீரர்கள் title=

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், கங்கையில் தங்கள் பதக்கங்களை வீசும் முடிவை ஒத்தி வைத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாத் அங்கு சென்றார். மல்யுத்த வீரர்களிடம் பேசி பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார். இதனையடுத்து மத்திய அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளார். மேலும் மல்யுத்த வீரர்களிடமிருந்து விருதுகள் மற்றும் பதக்கங்கள் அடங்கிய மூட்டையை பெற்றுக்கொண்ட நரேஷ் திகாத், இவற்றை ஜனாதிபதியிடம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் அனைவரும் ஹரித்துவாரில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். 

முன்னதாக, சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் கங்கை ஆற்றங்கரையில் இருக்கும் ஹர் கி பவுரியில் அமர்ந்து பதக்கங்களை பிடித்து அழுதனர். மறுபுறம், மல்யுத்த வீரர்களுக்கு பதக்கத்தை ஆற்றில் வீசும் முடிவை எதிர்த்து கங்கா கமிட்டி நின்றது. இது (ஹர் கி பவுரி) வழிபாட்டுத் தலம் என்றும், இங்கு அரசியல் செய்வதற்கான இடம் அல்ல என்று கங்கா கமிட்டியை சேர்ந்தவர்கள் கூறினார்.

பதக்கம் நாட்டின் பெருமை, ஆற்றில் வீச வேண்டாம் -ராகேஷ் திகாத்
விவசாயி தலைவர் ராகேஷ் திகாத் கூறியதாவது, "இந்த பதக்கம் நாட்டிற்கும், மூவர்ணக் கொடிக்கும் பெருமை, இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என அனைத்து மல்யுத்த வீரர்களையும் கேட்டுக்கொள்கிறோம். மல்யுத்த வீரர்களுடன் விரைவில் பேசுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - தெரியாத விஷயங்களை பேச வேண்டாம் என்றால் தெரிந்து பேசுங்கள் கங்குலி! வினேஷ் போகட்

கங்கையில் பதக்கங்களை வீச வேண்டாம் -ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா
மல்யுத்த வீரர்களின் முடிவு குறித்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா கூறியதாவது, "நாட்டை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், கங்கையில் பதக்கங்களை வீச வேண்டாம். பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தயவால் உங்களுக்கு இந்தப் பதக்கங்கள் கிடைக்கவில்லை என்றார்.

செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர்மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? எனப் பதிவிட்டிருந்தார்.

நாங்கள் மல்யுத்த வீரர்களுடன் இருக்கிறோம் -மம்தா பானர்ஜி
நமது மல்யுத்த வீரர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நான் மல்யுத்த வீரர்களிடம் பேசி அவர்களுக்கு எனது ஆதரவை வழங்கினேன். நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். ஒரு நபர் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டும், அவரை ஏன் கைது செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பி உள்ளார். 

பிரதமர் தன் ஆணவத்தை விட வேண்டும் -அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை குறிவைத்து ட்வீட் செய்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார். ஒட்டுமொத்த தேசத்தின் கண்களிலும் கண்ணீர். இனியாவது பிரதமர் தன் ஆணவத்தை விட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க - சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் ஆவேசம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்  முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி இந்த மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை டெல்லி காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர் ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றப்பட்டனர். 

இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் கிடையாது -டெல்லி காவல்துறை
38 நாட்களாக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் சட்டத்தை மீறியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். அடுத்த முறை போராட்டம் நடத்த மல்யுத்த வீரர்கள் அனுமதி கேட்டால், ஜந்தர் மந்தர் அல்ல, வேறு இடத்துக்கு அனுப்புவோம்.

மல்யுத்த வீரர்கள் உட்பட 109 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு:
ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்றத்தின் முன் மகிளா மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மல்யுத்த வீரர்கள் அங்கு செல்ல அணிவகுப்பு நடத்தினர். அவர்களுக்கு அனுமதி மறுத்து தடுப்புகள் போடப்பட்டது. ஆனால் தடுப்புக்களை உடைத்து செல்ல முயன்றனர். அப்போது, ​​போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். டெல்லி போலீசார் மல்யுத்த வீரர்கள் உட்பட 109 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். கலவரத்தை பரப்புவது, அரசு பணியை தடுப்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த பிரிவுகளில் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன்... பதக்கங்கள் கங்கையில் வீசிவோம் -சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீரர்களின் போராட்டம் இதுவரை என்ன நடந்தது?

வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ஜனவரி 18 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் தர்ணாவைத் தொடங்கினர். WFI தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார்.

ஜனவரி 21-ம் தேதி சர்ச்சை அதிகரித்ததையடுத்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீரர்களைச் சந்தித்து பேசிய பிறகு, புகாரை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். ஆனால் அந்தக் குழுவின் அறிக்கை இன்றுவரை வெளியிடப்படவில்லை. 

ஏப்ரல் 23 அன்று, மல்யுத்த வீரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரில் தர்ணாவில் அமர்ந்தனர். பிரிஜ் பூஷனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

ஏப்ரல் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், மல்யுத்த வீரர்களின் மனு மீதான விசாரணையில், பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீஸார் பாலியல் வன்கொடுமை மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 2 எஃப்ஐஆர்களை பதிவு செய்தனர்.

மே 3 ஆம் தேதி இரவு ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மல்யுத்த வீரர்களான ராகேஷ் யாதவ் மற்றும் வினேஷ் போகட் ஆகியோரின் சகோதரர் துஷ்யந்த் மற்றும் 5 போலீசார் காயமடைந்தனர்.

மே 7 அன்று, ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் காப்ஸின் மகாபஞ்சாயத் ஜந்தர் மந்தரில் நடந்தது. இதில் பிரிஜ் பூஷனை கைது செய்ய மத்திய அரசுக்கு 15 நாள் கெடு விதிக்கப்பட்டது.

மே 21 ஆம் தேதி மீண்டும் மகாபஞ்சாயத்து நடத்தப்பட்டு, இந்தியா கேட் மற்றும் மகிளா மகாபஞ்சாயத் ஆகிய இடங்களில் மே 28 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஊர்வலம், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மே 26 அன்று, மல்யுத்த வீரர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, மே 28 அன்று, போராட்டத் தளத்திலிருந்து புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பாதயாத்திரையாகப் பேரணியாகச் செல்வதாகத் தெரிவித்தனர்.

மே 28 அன்று, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் மகாபஞ்சாயத்துக்காக மல்யுத்த வீரர்கள் செல்ல முயன்றபோது, ​​அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மே 29 அன்று, மல்யுத்த வீரர்கள் நாள் முழுவதும் வீட்டில் தங்கி, இந்தியா கேட் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க - நாங்கள் துணை நிற்கிறோம்... போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News