சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் ஜி.என்.சாய்பாபாவின் கவிதைகள் மற்றும் கடிதங்கள் அடங்கிய தொகுப்பான "ஏன் என் பாதையைக் கண்டு இவ்வளவு பயப்படுகிறீர்கள்?" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், 1960-களில் இருந்த தலைவர்கள் செல்வம் மற்றும் நிலத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக "உண்மையான புரட்சிகர இயக்கங்களை" முன்னெடுத்துச் சென்றதாகவும், ஆனால் இப்போதுள்ள நாட்டின் தலைவர்கள், "5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ உப்பு" விநியோகம் செய்வதன் மூலம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதாகவும் விமர்சித்தார்.
மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காத அரசியல் கட்சிகள்.!
விமானியாக உள்ள தனது நண்பரிடம் 'ஒரு விமானத்தை பின்னோக்கி இயக்க முடியுமா? என சமீபத்தில் கேட்டபோது, அவர் வாய்விட்டு சிரித்து விட்டார் என்று கூறிய அருந்ததி ராய், ஆனால் நாட்டில் இன்று அதுதான் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். நாட்டின் இன்றைய தலைவர்கள் விமானத்தை பின்னோக்கி இயக்குவது போல் அனைத்தையும் தலைகீழாகக் கொண்டு செல்வதாகவும், நாம் அனைவரும் விபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அருந்ததி ராய் கூறினார்.
இந்தியாவின் சட்ட அமைப்பு "அதி நவீனமானது” எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் அச்சட்டம் சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைப் பொறுத்தே அமலாக்கப்படும் எனவும் கூறினார். 90% உடல் பாகங்கள் முடங்கி நடமாட முடியாவிட்டாலும், 7 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு பேராசிரியரைக் குறித்து பேசுவதற்காகவே அனைவரும் இப்போது கூடியுள்ளதாகக் கூறிய அவர், நாம் எந்த மாதிரியான நாட்டில் வாழ்கிறோம் என்பதற்கு இந்த நிகழ்வே போதும் எனவும், இது எவ்வளவு அவமானம் எனவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஜி.என்.சாய்பாபாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 55 வயதான ஜி.என்.சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல் செயல்படாததால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியே உயிர் வாழ்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம் - சீத்தாராம் யெச்சூரி!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR