கோயில்களில் தானே தியானம், யோகா செய்ய முடியும். அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் "விஞ்ஞான பைரவ" என்ற பெயரில் இரண்டு தினங்கள் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துவதாக இருந்தது. ஆனால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி நடத்துவதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரிய கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி வெங்கட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.
இதுக்குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கோயில்களில் தான் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்த முடியும். எங்கள் நிகழ்ச்சி நடத்த முறையாக அனுமதி வாங்கினோம். ஆனால் கோயில்களில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு உள்நோக்கம் ஏதாவது இருக்கும் எனத் தோன்றுகிறது எனக் கூறினார்.