பத்திரிக்கையாளர் விவகாரம்: SV சேகர் மீது 4 பிரிவில் வழக்கு!

பத்திரிகையாளர்களை விமர்சித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Last Updated : Apr 21, 2018, 08:24 PM IST
பத்திரிக்கையாளர் விவகாரம்: SV சேகர் மீது 4 பிரிவில் வழக்கு!  title=

பத்திரிகையாளர்களை விமர்சித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டிருந்த போதிலும், பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில், "என் மீது அன்பு கொண்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக, ஃபேஸ்புக்கில் படிக்காமல் தவறுதலாக ஒரு பதிவை ஃபார்வர்டு செய்து விட்டேன். தவறு என்று தெரிந்தும் அதை உடனடியாக நீக்கிவிட்டேன். இது தொடர்பாக, பத்திரிகை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் அறிக்கை வாயிலாக மன்னிப்பு கேட்டுவிட்டேன். யாரையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து அரசியல் செய்யும் நிலையில் நான் இல்லை. யாரையும் ஒருமையிலோ, மரியாதை குறைவாகவோ நடத்தியது கிடையாது. 

இந்தச்சூழலில் என்னுடைய தவறை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லவில்லை, மன்னிப்பு கேட்கிறேன். இதை அனைத்து தமிழக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி!" என்று கூறியுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநர் பன்வரிலால் புரோகித், பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பெண் நிருபர் வருத்தம் தெரிவிக்க, ஆளுநர் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். இதையடுத்து ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை மிக இழிவாக விமர்சித்து ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார். இதற்கு கண்டனம் எழுந்ததையடுத்து உடனடியாக அதை நீக்கி விட்டார்.

Trending News