‘பாகுபலி 2’ சர்ச்சை: வீடியோ வெளியிட்ட ராஜமெளலி

Last Updated : Apr 20, 2017, 03:20 PM IST
‘பாகுபலி 2’ சர்ச்சை: வீடியோ வெளியிட்ட ராஜமெளலி title=

'பாகுபலி 2' தொடர்பாக கர்நாடகாவில் எழுந்துள்ள சர்ச்சைக்கு, ராஜமெளலி வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்..

ஏப்ரல் 28-ம் தேதி அனைத்து மொழிகளிலும் 'பாகுபலி 2' வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அனைத்து இறுதிகட்ட பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வந்தது படக்குழு.

கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியீடு தொடர்பாக சிக்கல் நீடித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்சினைத் தொடர்பாக தமிழ் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கன்னட அமைப்புகளை கடுமையாக சாடிப் பேசினார் சத்யராஜ். இப்பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ளன கன்னட அமைப்புகள்.

தன்னுடைய பேச்சுக்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகாவில் 'பாகுபலி 2' படத்தின் உரிமையை வாங்கி வெளியிட ஆளில்லை. 'பாகுபலி 2' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா நேரடியாகவே வெளியிட முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 28-ம் தேதி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதனால் பெரும் சர்ச்சை உண்டாகிவிட்டது. 

இச்சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜமெளலி.

 

 

அந்த வீடியோவில் கூறப்பட்டது: "பல வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் சார் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியுள்ளன. 'பாகுபலி' வெளியாகும் போதும் கூட இப்பிரச்சினையில்லை.

இப்படத்தில் அவர் ஒரு நடிகர் மட்டுமே. தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல. உங்களுடைய எதிர்ப்பை நான் சத்யராஜ் அவர்களிடம் விளக்கிவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. 

சத்யராஜ் மீதுள்ள கோபத்தை 'பாகுபலி ‌2' திரைப்படத்தின் மீது காட்டுவது சரியல்ல. 'பாகுபலி' படத்துக்கு கிடைத்த அதே ஒத்துழைப்பை, 'பாகுபலி 2' படத்துக்கும் தர வேண்டும் " என்று பேசியுள்ளார் ராஜமெளலி.

Trending News