ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் பாடல் பாடியவர், சின்மயி. அது மட்டுமன்றி, இவர் சில நடிகைகளின் கதாப்பாத்திரங்களுக்கு படங்களில் வாய்சும் கொடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டு வைரமுத்து மீது பாலியல் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாராம் #Metoo என்ற பெயரில் விஸ்வரூபம் எடுத்தது. அன்றிலிருந்து சின்மயி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
மல்யுத்த வீரர்களின் போராட்டம்:
மல்யுத்த வீராங்கனைகளை பா.ஜ.க கட்சியின் முக்கிய உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக துன்புருத்தியதாக கூறி மல்யுத்த வீரர்கள் சிலர் புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்கள், பிரிஜ் பூஷனை தலைவர் பதவியிலிருந்து நீக்க கோரியும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது இரண்டு பதிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையும் நடைப்பெற்று வருகிறது. இந்த போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தாலும் இதுகுறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் விழா நடக்கும் இடத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆதரவு தெரிவித்த கமல்..
மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டம் சில நாட்களுக்கு முன்னர் 1 மாதத்தை எட்டியது. அப்போது, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், “மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர்களை நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக போராட வைக்க வேண்டிய நாம், அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போராட வைத்து விட்டோம். இந்தியர்களே, நாம் யார் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்? நம் நாட்டின் விளையாட்டு வீரர்கள் மீதா? அல்லது அதிக குற்ற பின்னணி கொண்ட ஒரு அரசியல் வாதியின் மீதா?” என்று கேள்வி கேட்டு ஆவேச பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனுடன் #IStandWithMyChampions என்ற ஹேஷ்டேக்கையும் கமல் இணைத்திருந்தார்.
மீ டூவிற்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்?
கமலின் இந்த ட்வீட்டை பார்த்த சின்மயி, இது போலத்தான் தானும் ஒரு கவிஞரை பற்றி கூறியதாகவும் அப்போது இதை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒரு நபரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக தன்னை 5 வருடமாக சினிமாவில் இருந்து தடை செய்துள்ளதாகவும் அந்த கவிஞரை எல்லோருக்கும் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தான் இருந்த துறையிலேயே நடந்த பாலியல் வன்முறை குறித்து குரல் கொடுக்காமல் இப்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் அரசியல்வாதியை எப்படி நம்புவது?” என்றும் சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரசிகர்கள் ரிப்ளை:
சின்மயியின் இந்த கேள்வி சிலருக்கு ஞாயமாக தோன்றினாலும், சிலர் இவரை விமர்சனம் செய்தனர். இவ்வளவு பெரிய போராட்டம் போய்க்கொண்டிருக்கும் போது இந்த கேள்வியை ஏன் இப்போது கேட்க வேண்டும் என்றும் சில ரசிகர்கள் அவரிடம் கேட்டனர். அதில் ஒரு சிலருக்கு ரிப்ளை செய்த சின்மயி தான் மல்யுத்த வீரர்களுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். நேற்று போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டபோதும் இது குறித்த பதிவுகளை அவர் வெளியிட்டிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ