கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் புத்தகமாக வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது, இது ஒரு வரலாற்று நாவலாகவும் தமிழர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது. இதனை திரைப்படமாக எடுக்க பலரும் முன் வந்து அது நடைபெறவில்லை. இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
முதல் பாகத்தில் ஜெயம் ரவி கடலில் புயலில் சிக்கி இறந்தது போல் காட்டி இருப்பார்கள், அதனுடன் படம் முடிவிற்கு வந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் சிறுவயதில் இருக்கும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரங்கள் காட்டப்படுகிறது, சொல்லப்போனால் இதையே ஒரு தனி படமாக எடுக்கலாம். அந்த அளவிற்கு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் மணிரத்தினம். இந்த சிறு வயது கதாபாத்திரங்கள் தான் இருவருக்கும் இடையே உள்ள காதலை வலுப்படுத்துகிறது. கடலில் சிக்கிய அருள்மொழிவர்மனை நந்தினி அம்மா உதவியுடன் வந்தியத்தேவன் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்கிறார். மறுபுறம் நந்தினி பாண்டியர்களின் உதவியுடன் ஆதித்ய கரிகாலனை கொள்ள சதித்திட்டம் தீட்டுகிறார். இறுதியில் ஆதித்ய கரிகாலனுக்கு என்ன ஆனது? சோழ தேசத்தை பாண்டிய மன்னர்கள் கைபேற்றினார்களா இல்லையா? என்பது தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் கதை.
சாத்தியமே இல்லை எனும் விஷயத்தை சாத்தியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். நாவலாக நாம் படித்த கதையை திரைப்படமாக நம் அனைவருக்கும் கொடுத்துள்ளார். நிச்சயம் இவரை தவிர இதை யாராலும் செய்திருக்க முடியாது என்பதை நிரூபித்து உள்ளார். ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர், குறிப்பாக ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய் ஆகிய ஐந்து பேர் தான் பொன்னியின் செல்வன் படத்தில் தூண்கள். முதல் பாகத்தில் விக்ரமிற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்ற பேச்சு இருந்தது, அதனை சரிசெய்ய இரண்டாம் பாகம் முழுக்கவே விக்ரம் தான் படத்தை தாங்கி பிடிக்கிறார், ஆதித்ய கரிகாலனாகவே வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம்.
அருள்மொழி வர்மனாக இருந்து ராஜராஜ சோழனாக மாறும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. ஒரு ராஜா எப்படி இருப்பார் என்பதை தன்னுடைய உடல் மொழி மூலம் சொல்லி இருக்கிறார் ஜெயம் ரவி. அழகின் மறு உருவமாக திரிஷா திரையில் ஜொலிக்கிறார். குறிப்பாக ஒரு நடு தீவில் கார்த்தி மற்றும் திரிஷா இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் கவிதை போல் இருந்தது. அதேபோல இரண்டாம் பாதியில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இடையே நடக்கும் உரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. பின்னணி இசை மற்றும் பாடல்களில் ஏஆர் ரகுமான் அசத்தியுள்ளார், பல சாதாரண காட்சிகளும் ரகுமானின் இசையில் அசாதாரண காட்சிகளாக மாறி உள்ளது. புத்தகத்தை வாசித்து விட்டு பொன்னின் செல்வன் படத்தை பார்க்க செல்பவர்களுக்கு நிறைய கேள்விகளும் குறைகளும் எழலாம். காரணம் பொன்னியின் செல்வன் நாவலின் பல முக்கியமான கதைகளை மாற்றி அமைத்துள்ளார் மணிரத்தினம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நாவலில் உள்ள எதுவுமே இடம் பெறவில்லை. மேலும், போர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆதித்ய கரிகாலன் இறக்கும் காட்சியும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை, நாவலில் படிக்கும் போதே உணர்ச்சிகளை ஏற்படுத்தும் அந்த காட்சி, திரையில் பிரதிபலிக்கவில்லை. இது பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். மற்றபடி முதல் பாதத்தை போலவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகமே இல்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ