Saif alikhan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள 'சத்குரு ஷரன்' என்ற 12 மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து திருட முயன்றுள்ளார். இதனைக் கண்ட பெண் பணியாளர் சத்தம் போடவே சைஃப் அலிகான் அவரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் சைஃப் அலிகானை கத்தியால் 6 முறை குத்திவிட்டு தப்பி ஓடினார்.
இதில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025: லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாகும் ரிஷப் பண்ட்?
கைதானவரின் திடுக்கிடும் தகவல்
இந்த நிலையில், அந்த நபர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இவர் தானே மாவட்டத்திற்கு அருகே உள்ள கோட்பந்தர் சலையில் உள்ள ஹிரானந்தனி எஸ்டேட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவை சேர்ந்தவர் இல்லை. வங்கதேசத்தில் உள்ள ஜலோகட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 5 மாதங்களுக்கும் மேலாக மும்பையில் இவர் சிறு சிறு வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
இவரது பெயர் முகமது ஹரிபுல் இஸ்லாம்(30). முதலில் போலீசாரிடம் பெயரை மாற்றி மாற்றி கூறியுள்ளார். பின்னர் அவரது ஆவணங்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தானேவில் சிக்கியது எப்படி?
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கைதான நபர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். அவரது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த நபருக்கு பாலிவுட் நடிகரின் வீட்டுக்குள் நுழைந்தது தெரியாது, அவரது நோக்கம் திருட்டுதான். மேலும், கைதான நபர் வெவ்வேறு பணிகளை செய்து வந்துள்ளார்.
ரெஸ்டாரண்ட், மெட்ரோ கட்டுமான பணி என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு கைது நடவடிக்கைகளுக்கு பயந்து செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்தும் தலைமறைவாக இருந்தும் வந்துள்ளார். மேலும், சைஃப் அலிகான் வீட்டுக்குள் சென்றது, தாதர் ரயில் நிலையத்தில் நடமாடியது தொடர்பான வீடியோக்களை வைத்து அவரது புகைப்படம் எடுக்கப்பட்டது. பின்னர் முன்பை போலீசார் தேடிய நிலையில், அவர் தானே கைதானார் என அவர் தெரிவித்தார்.
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: அணிகளை வழிநடத்தும் கேப்டன்கள் யார் யார்? லிஸ்ட் இதோ!