தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.
இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (6-ந்தேதி) இந்த விழா நடக்கிறது. மலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது. இதில் நடிகர்-நடிகைகள் நடனம், நாடகம், பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க உள்ளன.
இந்த விழாவில் 340 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்க அறக்கட்டளையில் நடிகர் கமல்ஹாசன் உறுப்பினராக இருக்கிறார். அவரும் இந்த விழாவில் பங்கேற்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இருவருக்கும் நேற்று மலேசியா புறப்பட்டு சென்றனர்.
நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் ஏற்கனவே மலேசியா சென்று விட்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் மேலும் பல நடிகர்-நடிகைகளும் நேற்று மலேசியா சென்றார்கள் .தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மலேசியா சென்ற ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சதித்து கொண்டனர்.
மலேசிய கலைவிழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்றும், அப்போது அரசியல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.