நாடு முழுவதும் நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனையடுத்து, அனிதாவின் பெயரில் படம் ஒரு உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.
அதில், அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளார். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பின்னர் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா இசையமைக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பது குறித்து பி.சுசீலா கூறியபோது:- 'இசையமைப்பதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும் இருப்பினும் படக்குழுவினர் கேட்டு கொண்டதாலும், படத்தின் கதை மனதிற்கு பிடித்ததாலும் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பி.சுசீலா அவர்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி பல தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார்.
அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ள பி.சுசீலா அவர்கள், முதல் முறையாக இசையமைப்பாளராக அவதாரம் எடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.