Cricket | சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது பிசிசிஐ உரிய மரியாதை கொடுக்காத 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்
Indian cricketers retirement | இந்திய அணிக்காக மகத்தான பங்களிப்பு வழங்கியபோதும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது பிசிசிஐ உரிய மரியாதை கொடுக்காத 5 இந்திய பிளேயர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் எல்லா பிளேயர்களும் தாங்கள் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியை ரசிகர்கள் முன்னிலையில் சொந்த மைதானத்தில் விடை கொடுக்க வேண்டும் என விரும்புவார்கள். உதாரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும்போது அவருக்கு உரிய மரியாதை கொடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வழியனுப்பி வைத்தது.
ஆனால் அவரைப் போலவே அத்தகைய மரியாதைக்குரிய 5 இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த மரியாதையும் கொடுக்காமல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வைத்தது. பின்னர் கூட ஒரு பாராட்டு விழா கூட அந்த பிளேயர்களுக்கு பிசிசிஐ நடத்தவில்லை. அந்த 5 பிளேயர்கள் யார் என்பதை இங்கே பார்க்கலாம்....
மகேந்திர சிங் தோனி | இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்டைம் கிரேட் கேப்டன் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவருடைய தலைமையில் தான் இந்தியா ஐசிசி டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை (2011) மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகியவற்றை வென்றது. இது தவிர, 2009 ஆம் ஆண்டு இந்தியா முதல் முறையாக டெஸ்டில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால், டிசம்பர் 2014-ல், தோனி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் பின்னர், தோனி ஆகஸ்ட் 15, 2020 அன்று ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்தியாவுக்கு இவ்வளவு வெற்றிகளைக் கொடுத்த பிறகு, தோனிக்கு ஒரு பிரியாவிடை போட்டியை கூட பிசிசிஐ ஏற்பாடு செய்யவில்லை.
வீரேந்தர் சேவாக் | இந்தியாவுக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரேந்தர் சேவாக் 8586 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 49.34, இதில் 23 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 319 ஆகும். சேவாக் 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் மற்றும் 38 அரைசதங்கள் உட்பட 8273 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டியில் சேவாக்கின் அதிகபட்ச ஸ்கோர் 219. இது தவிர, 19 டி-20 போட்டிகளில் விளையாடி 394 ரன்கள் எடுத்திருக்கிறார் சேவாக். டி20, ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற அணிகளில் இருந்த சேவாக்கிற்கும் பேர்வேல் போட்டியை பிசிசிஐ நடத்தவில்லை.
கவுதம் கம்பீர் | கவுதம் கம்பீர் 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் இவருக்கும் பேர்வெல் போட்டியை பிசிசிஐ ஏற்பாடு செய்யவல்லை. 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடி அந்த இரு உலகக்கோப்பைகளையும் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டி, 147 ஒருநாள் போட்டி, 37 டி20 போட்டிகளில் விளையாடினார்.
ராகுல் டிராவிட் | ராகுல் டிராவிட் 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ராகுல் டிராவிட் தான். டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் டிராவிட் 10,889 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது 12 சதங்களும் அடங்கும். ஒரு ஃபீல்டராக அதிக கேட்சுகளை பிடித்த உலக சாதனையை டிராவிட் வைத்திருக்கிறார். அவர் 301 இன்னிங்ஸ்களில் 210 கேட்சுகளைப் பிடித்தார். ஆனால் இவருக்கும் பிசிசிஐ உரிய மரியாதை செய்யவில்லை.
ஜாகீர் கான் | இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் இவருக்கும் ஒரு பிரியாவிடை போட்டி கிடைக்கவில்லை. இந்தியாவுக்காக ஜாகீர் கான் 92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இது தவிர, 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர்கானுக்கு பிரியாவிடை போட்டி விளையாட பிசிசிஐ வாய்ப்பு கொடுக்கவில்லை.