புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். தற்போதி அரசியல்வாதியும் ஆவார்.
பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1954-ம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தார்.
இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன்(1930), சந்திரஹாசன்(1936) மற்றும் நளினி(1946). இவர்களில் கடைக்குட்டி கமல்ஹாசன்.
இவரின் குடும்ப மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்றார். அப்பொழுது கமலின் திறமையை பார்த்த ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் எவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிக்க வைத்தார்.
குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா(1960). இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார் கமல்.
எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்துள்ளார்.
முதன் முதலாக கமல் கதாநாயகனாக தோன்றிய படம் கன்னியாகுமரி (1974). இது ஒரு மலையாள படம் ஆகும்.
1970-களில் கமலும், ரஜினியும் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம் "நினைத்தாலே இனிக்கும்"
1970-களில் கமல், தமிழ், மலையாளம், தெலுங்கு என கிட்டத்தட்ட 80-க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்தார்.
1980-களில் தென்னிந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் இந்தி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த "ஏக் துஜே கே லியே" மிகப் பெரிய வெற்றி பெற்றது.
கமல் இதுவரை 250-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலுக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்த நடிகைகள் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியா ஆவார்கள்.
1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
18 ஃபிலிம் ஃபேர் விருதை பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் தான். இனி எனக்கு விருது தராதீர்கள் புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், அவருக்கு ஃபிலிம் ஃபேர் விருதை வழங்குவது நிறுத்தப்பட்டது.
கமல்ஹாசன் 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் மற்றும் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
ஒரே வருடத்தில் 5 வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். 8 முறை தமிழ் மாநில அரசின் விருதையும், இரண்டு முறை ஆந்திர அரசின் விருதையும் பெற்று இருக்கிறார்.
1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
கமல்ஹாசன் நடித்த விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்கள் சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் பெற்றுள்ளது.
2005-ம் ஆண்டு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கப் பட்டது.
நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் கமல்ஹாசன்.
எண்பதுகளின் மத்தியில் "மய்யம்" என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்ஹாசன்.
தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். தன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல். கமலின் நற்பணி இயக்கத்தினர் உடல்தானம் செய்து வருகிறார்கள்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஃப்ரஞ்ச் போன்ற மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்ஹாசன்.
தற்போது ஆனந்த விகடனில் கமல் எழுதி வரும் "என்னுள் மையம் கொண்ட புயல்" என்ற தொடர் அரசியல் வட்டாரத்தில் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய முதல் தென் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கமல்ஹாசன் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கினார்.
அப்துல் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார் கமல்ஹாசன். கலாம் வீட்டில் காலை உணவு அருந்தினார் கமல்.
உலக அரசியலை தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.
ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிடும் கருத்துக்கள் மூலமாகவே தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லாத தமிழக அரசியலில், கமல்ஹாசன் வெற்றி பெறுவாரா, அல்லது தோல்வியை சந்திப்பாரா என்பதற்கான விடை காலத்தின் கைகளிலேயே இருக்கிறது.