Tamilaga Vetri Kazhagam Official Flag: நடிகர் விஜய் (Actor Vijay) கடந்த பிப்ரவரி மாதம் அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சி மாநிலம் முழுவதும் போட்டியிடும் என அப்போதே நடிகர் விஜய் அறிவித்தார். அதுமட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கை முழுக்குப் போட்டுவிட்டு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.
தீவிர அரசியலுக்கு இறங்கும் முன், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தனது இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அந்த நிலையில், வரும் செப். 5ஆம் தேதி அன்று அவரின் The Greatest Of All Time திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும், இரண்டு வாரம் காலமே உள்ள நிலையில், நேற்று முன்தினம் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நாடு முழுவதும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
மாநாடு எங்கு, எப்போது?
பட வேலைகள் ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தனது கட்சி பணிகளிலும் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி களச் செயல்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தவெக சார்பில் மாபெரும் மாநாடு ஒன்றை திருச்சி அல்லது சேலம் மாநகரில் நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் மாநாட்டிற்கு முன் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ‘தி கோட்’ பட புரமோஷனில் தமிழக வெற்றிக் கழகம் பெயரைப் பயன்படுத்தக் கூடாது: விஜய்
ஆக. 22ம் தேதி நடைபெறும் கூட்டம்
அந்த வகையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி வரும் ஆக. 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கொடி அறிமுகம் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்த கூட்டம் சிறப்பான வகையில் நடைபெறுவதற்காக, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருந்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுதான் அதிகாரப்பூர்வ கொடி?
இந்நிலையில், கட்சி கொடியை ஏற்றுவதற்கான ஒத்திகையை நடிகர் விஜய் இன்று மேற்கொண்டார். ஒத்திகைக்காக அவர் கட்சி கொடியை இன்று ஏற்றினார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மஞ்சள் நிறத்தில் இருந்தது. மேலும், அதன் நடுவே பழுப்பு நிற பார்டரில் நடிகர் விஜய்யின் முகம் பொறிக்கப்பட்ட வகையில் கட்சி கொடி வடிவமைக்கப்பட்டது. தற்போது இந்த கொடி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த கொடிதான் அதிகாரப்பூர்வ கொடி என அறிவிக்கப்படாவிட்டாலும் ஏறத்தாழ இது இறுதியானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிடர் கூறியது என்ன?
அந்த வகையில், நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியை மஞ்சள் நிறத்தில் வடிவமைத்ததற்கு ஜோதிட ரீதியில் ஏதும் காரணம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியபோது, கோவையை சேர்ந்த ஜோதிட கலைவாணி, திருமதி. தனபாக்கியம், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்களை இங்கு காணலாம்.
அவர் கூறியதாவது,"22ஆம் தேதி என்பது ராகு. ராகு என்றால் பிரம்மாண்டம். பனையூர் என்றால் சனி குறிக்க கூடிய ஊர். மக்கள் தொடர்பு அதிகம் ஏற்படும். கட்சிக் கொடியில் தளபதி விஜய்யின் படம் இடம்பெற்றுள்ளது. விஜய் என்றால் சூரியன், தளபதி என்றால் செவ்வாய், கட்சி கொடி நிறம் மஞ்சள், மஞ்சள் என்பது குரு. இதில் நாம் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் நடிகர் விஜய் கடக ராசியை (Actor Vijay Zodiac Sign) சேர்ந்தவர்.
தற்போது கடக ராசி அதிபதியான சந்திரன் சாரத்தில் குரு பயணித்து தன் உச்ச வீட்டை நோக்கி செல்ல இருக்கிறார். தளபதி விஜய் ஜென்ம நட்சத்திரம் (Actor Vijay Birth Star) பூசம். பூசம் என்பது குரு உச்சம் பெறும் நட்சத்திரம்..எனவே மஞ்சள் நிறம். இதுவே வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் . சந்திரன் முழு பலம் பெறும் நாளான பெளர்ணமி தினத்தில் பவம் கரணத்தில் இதை அறிவித்து இருக்கிறார்..பவம் கரணத்தில் செய்யும் காரியம் மிக பிரமாண்டமான வளர்ச்சி மற்றும் நிலைத்த வெற்றியை கொடுக்கும்.
அரசியல் கிரகம் சூரியன்+செவ்வாய்+குரு +சனி உள்ளது. இதனால், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் முன்னேற்றம் நடிகர் விஜய்யால் ஏற்படும். விஜய், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி கொள்ளைகளை பரப்புரை செய்வார். எனவே, இன்னும் 12 நாட்களுக்கு பிறகு அவருக்கு வளர்ச்சி பாதை இருக்கும். இதனால், பெருவாரியான இளைஞர்கள் கூட்டம் கட்சியில் இணைவார்கள்"
மேலும் படிக்க | 'நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம்' பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ