14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர் வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நான்கு அணிகள் "சூப்பர் 4 சுற்று"க்கு முன்னேறின. இதில் இந்தியா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் (பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்) எதிராக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முகமது ஷேசாத் அபாரமான ஆடி 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து, 253 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு இறங்கினர். இந்திய அணியின் எண்ணிக்கை 110 ஆக இருக்கும்போது அம்பதி ராயுடு 57 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, லோகேஷ் ராகுல் 60 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். மறுபுறம் கேப்டன் தோனி 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 8 ரன்னிலும், கேதார் ஜாதவ் 19 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா போராடி அணியை வெற்றி பெற பாடுபட்டார். இறுதி ஓவரை வீசிய ரஷித் கான் ஜடேஜாவை அவுட்டாக்கி இந்தியாவின் வெற்றியை தடுத்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, போட்டி சமனானது. ஆப்கானிஸ்தான் தரப்பில் மொகமது நபி. அப்தாப் ஆலம், ரஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டும், ஜாவித் அஹமதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.