Fact Check On Natarajan Hindi Viral News: ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ஆவார். தமிழ்நாட்டு வீரரான இவர் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர். எளிய மற்றும் பின்தங்கிய கிராமப் பகுதியில் இருந்து இந்திய அணிக்கு சென்று விளையாடும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொண்ட நடராஜன் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஊக்கமளிப்பவராக திகழ்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி பலதரப்பு மக்களிடமும் நடராஜன் சென்று சேர்ந்தது முக்கிய காரணம் அவரின் எளிய பின்னணி எனலாம்.
இருப்பினும், நடராஜனுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படுவதில்லை என ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 2024 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக நடராஜன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். நடராஜன் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என சொல்லப்பட்டாலும் பவர்பிளே ஓவர்கள், மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என கேப்டன் கம்மின்ஸ் கூப்பிடும் போதெல்லாம் சீரான லைன் அண்ட் லெந்தில் வீசி சன்ரைசர்ஸ் அணிக்கு விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்தார்.
நடராஜனுக்கு வாய்ப்பில்லை ஏன்?
சிறப்பாக விளையாடினாலும் நடராஜனுக்கு ஏன் இந்திய அணியில் தற்போது வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்ற கேள்விகள் மட்டும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் அவர் தமிழக வீரர் என்பதாலும் சஞ்சு சாம்சனுக்கு சீரான வாய்ப்பை அளிக்காதது போல் நடராஜனுக்கும் வாய்ப்பளிக்க மறுக்கின்றனர் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ரோஹித், விராட்டுக்கு ரெஸ்ட்? கேப்டன்ஸிக்கு அடித்துக்கொள்ளப் போகும் இந்த 2 வீரர்கள்!
ஆனால், வல்லுநர்களோ நடராஜனின் திறமையில் எவ்வித கேள்வியும் இல்லையென்றாலும் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது என இளமையும், அனுபவமும் பெற்ற டி20 பௌலர்கள் இருக்கும்போது நடராஜனை எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். நீண்ட ஓவர்களை நடராஜன் வீசுவாரா என்ற கேள்வி இருப்பதால்தான் அவருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்டில் வாய்ப்பில்லாமல் இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
திமுக நிர்வாகியின் பதிவு
இந்த சூழலில், இந்தி மொழி தெரியாததால்தான் இந்திய அணிக்கு தன்னை தேர்வு செய்யவில்லை என நடராஜனே சொன்னதாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தி மொழி அடிப்படையில் இல்லை என்பதால் அதனை கற்பதற்கு வாய்ப்பும் இல்லை என்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டை அடுத்து திமுகவின் மாணவ அணி தலைவரான ராஜீவ் காந்தி அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எங்களுக்கு எப்பவும் நீங்கள் எங்கள் தங்கராசு நடராஜன்தான்!!
அவாளுக்கு நீங்க எவ்வளவு வளர்ந்தாலும் நட்டு…. நட்டு..தான்!!
ஆனால் பாருங்க தல @Natarajan_91
IPL விளையாட வருகிற கம்மின்ஸ்,
சுனில் நரேன்,
ஹெட்,
பட்லர்,
சால்டு
இவர்கள் எல்லாம் எந்த School ல இந்தி… pic.twitter.com/92QitHsdxg— R.Rajiv Gandhi (@rajiv_dmk) July 9, 2024
அந்த பதிவில்,"ஐபிஎல் விளையாட வருகிற கம்மின்ஸ், சுனில் நரேன், ஹெட், பட்லர், சால்ட் இவர்கள் எல்லாம் எந்த ஸ்கூல்ல இந்தி படித்தார்கள்... தெரியவில்லையே... ??? உங்களுக்கு இந்தி தெரியாத நாளதான் உங்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு பன்னல அப்படித்தானே??? சரி..சரி…விடுங்க… ஒரே கேள்வி தான் உங்களிடம்… சேலத்தில் அடகு கடை வந்திருக்கும் நம்ம சேட்டுக்கு இந்தி நல்லா தெரியுமே ஏன் அவரு IPl கூட விளையாடல?" என பதிவிட்டிருந்தார்.
வைரலான நடராஜன் வீடியோ
இந்தி மொழி தெரியாததால்தான் தன்னை இந்திய அணியில் எடுக்கவில்லை என்றோ தனக்கு வாய்ப்பு வரவில்லை என்றோ நடராஜன் கூறினாரா இல்லையா என்பதை உறுதிசெய்வதே இங்கு நோக்கமாகும். கல்லூரி ஒன்றில் மாணவன் எழுப்பிய கேள்விக்கு நடராஜன் பதில் அளித்திருந்தார், அந்த பதிலின் வீடியோதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அந்த வீடியோவில் நடராஜன் பேசியது என்ன, தற்போது பகிரப்படும் தகவல்கள் உண்மையா இல்லையா என்பதை இங்கு காணலாம்.
நடராஜன் பேசியது என்ன?
அந்த மாணவன் முதன்முதலில் ஐபிஎல் அணியில் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) தேர்வான போது நீங்கள் களத்திற்கு சென்றபோது அந்த அனுபவம் எப்படி இருந்தது என கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கு அவர்,"இப்போது பேசும் அளவுக்கு கூட நான் பேசமாட்டேன். அங்கு முழுவதும் ஹிந்திதான். நல்வாய்ப்பாக இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கு தமிழ் தெரியும், அவர் பஞ்சாப் அணியில் இருந்தார். அவர்தான் எனக்கு தகவல்தொடர்பில் உதவியாய் இருந்தார். அவர் அந்த ஒரு வருடம் எனக்கு ஸ்ரீதர் மிக உதவியாக இருந்தார்.
அதுமட்டுமின்றி, சேவாக்கும் எனக்கு மிகுந்த உதவிக்கரமாக இருந்தார். ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் காயமடைந்தால் பல நடைமுறைகள் இருக்கின்றன. அந்த நேரத்தில் சேவாக்கே எனக்கு உதவிக்கரமாக இருந்தார், குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என்றும் அவரே கூறினார். எனவே தப்போ சரியோ இப்போது இருந்தே பேசத் தொடங்குங்கள்... எனக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாததால், அங்கு நான் தனியாக இருப்பது போல் உணர்ந்தேன். எனவே நான் பட்ட சிரமத்தை நீங்கள் பெறக் கூடாது என்பதால் சொல்கிறேன், இப்போதே பேசத் தொடங்குங்கள்" என்றார்.
இதில் அவர் இந்தி படிக்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிடவும் இல்லை, இந்தி தெரியாததால் தன்னை இந்திய அணியில் எடுக்கவில்லை என்றும் கூறவில்லை. அவர் இந்தி தெரியாததால் சிரமப்பட்டேன் என்று கூறினாலும் அது அவரின் அனுபவம் சார்ந்தே கூறுகிறார். மேலும் அவருக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாததால்தான் பிரச்னையே என்கிறார். அவர் கம்யூனிக்கேஷன் முக்கியம் என்கிறாரே தவிர இந்தியில் பேசினால்தான் நல்லது என்றோ, இந்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றோ கூறவில்லை.
மேலும் படிக்க | ஒருபோட்டியில் கூட விளையாடாமல் கோடி கணக்கில் சம்பாதித்த ரிங்கு சிங்! எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ