உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியா எதிர்வரும் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவு பெற்றது. நேற்றைய போட்டிகளின் பின்னர் இறுதி செய்யப்பட்ட புள்ளி பட்டியல் படி முதல் இடத்தில் 15 புள்ளிகளுடன் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் 14 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும் உள்ளது. மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே 12, 11 புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன.
இதனையடுத்து வரும் ஜூலை 9-ஆம் நாள் ஓல்ட் ட்ராப்போர்ட் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முன்னதாக கடந்த ஜூன் 13-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த லீக் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அரையிறுதி போட்டியில் இவ்விரு அணிகளும் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வரும் ஜூலை 11-ஆம் நாள் நடைபெறவிருக்கும் இரண்டாவது அரயிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற. இவ்விரு போட்டிகளில் வெற்றிப் பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். பின்னர் வரும் ஜூலை 14-ஆம் நாள் நடைபெறும் இறுதி போட்டியில் இரு அணிகளும் கோப்பைக்கான போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.