சச்சின் டெண்டுல்கர் 100 சதம் அடித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
‘சாதனை’ என்கிற பெயருக்கு கிரிக்கெட் டிக்சனரியில் பொருள் தேடினால் அது ‘சச்சின்’ எனக் காட்டக்கூடும். அந்த அளவுக்கு, கிரிக்கெட் உலகில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார் சச்சின். அவர் இதுவரை படைத்துள்ள சாதனைகள் அனைத்தையும் ஒருவரால் முறையாகத் தொகுத்துவிடமுடியும் என்றால் அதுவே பெரிய சாதனைதான். ஏனெனில், அந்த அளவுக்குக் கொட்டிக் கிடக்கின்றன அவரது சாதனைகள். ரெக்கார்டுகளை உருவாக்குவதையே தனது முழுநேர வேலையாகக் கொண்டிருந்த சச்சினின் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான சாதனைகளுள் ஒன்று- சர்வதேச போட்டிகளில் 100 சதம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிப்பதே பல வீரர்களுக்கு எட்டாக் கனியாக உள்ள நிலையில் சதத்தில் சதம் அடித்த சச்சினின் சாதனை இன்றுவரைக்கும் எவராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது. இனிமேலும் அதனை முறியடிப்பதும் கடினமே. இந்த அரிய சாதனையை அவர் படைத்து இன்றுடன் 10ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. ஆம், 2012ஆம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில்தான் அந்த அபூர்வ சாதனையை நிகழ்த்தி ஆச்சர்யம் காட்டினார் சச்சின்.
2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் 99 சதம் என்ற இலக்கை நிறைவுசெய்த சச்சின் அடுத்த ஒரு சதத்தை எப்போது அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்; சச்சினும்தான்.
பலதடவை அந்த வாய்ப்பு நழுவிப் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் ஆசியக் கோப்பையில் வங்கதேச அணியை எதிர்கொண்டது இந்தியா. இப்போட்டியில் துவக்க வீரராகக் களமிறங்கிய சச்சின், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 224 ரன்களை எடுத்திருந்த நிலையில் சுரேஷ் ரெய்னா சிங்கிள் அடிக்க, 99 ரன்களுடன் எதிர்முனையிலிருந்த சச்சின் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தை இடது புறமாகத் தட்டி விட்டு சிங்கிள் எடுத்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் தனது நூறாவது சதத்தைப் பதிவுசெய்தார்.
மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல; கேப்டன்ஸியை அடிச்சுத் தூக்கிய டு பிளசிஸ்!
சக வீரர்கள் முதல் பார்வையாளர்கள் வரை என ஒட்டுமொத்த மைதானமும் கரவொலியாலும் வாழ்த்து மழையாலும் அதிர்ந்தது. மிகவும் உணர்ச்சிமயமாகக் காணப்பட்ட சச்சின், சதம் அடித்த தனது பேட்டை சில நொடிகள் விடாமல் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார். அந்தப் பார்வையில், ஓர் உற்ற நண்பனை உருக்கத்துடன் பார்க்கும் தொனி இருந்தது. எத்தனை நண்பர்களை(பேட்டுகளை) அவர் கடந்து வந்திருந்தாலும் ‘நட்பு’ எப்போதும் ஒன்றுதானே!?
சச்சினின் கரியரில் மகத்தான தருணங்களில் ஒன்றாக அமைந்த இந்தச் சாதனை நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்த தங்களது நினைவலைகளை ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்துவருகின்றனர்.