நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து இந்தியா அணி நாடு திரும்ப உள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அரையிறுதியில் அழுத்தம் நிறைந்த கட்டத்தில் இங்கிலாந்திடம் முழுவதுமாக சரணடைந்தது.
இந்தியாவின் தோல்வியை அடுத்து, மூத்த வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் மூத்த வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறுகையில்,"இந்தியாவுக்கு அழுத்தம் அதிகமாக இருந்தது. ஏனென்றால், பாகிஸ்தான் ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது அவர்களை பாதித்துள்ளது" என்றார். தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கர்,"ரசிகர்கள் இந்த நேரத்தில் விமர்சனங்களை தள்ளிவைத்துவிட்டு, இந்திய வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
தோல்வி குறித்து இந்திய வீரர்களான கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி ரசிகர்களுக்கு, ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ICC T20 World Cup : இந்தியாவை படுகுழியில் தள்ளிய இந்த 4 வீரர்கள் - முழு விவரம்!
Thank you to all our fans who turned up in huge numbers throughout to support us in the stadiums. Always feel proud to wear this jersey and represent our country
— Virat Kohli (@imVkohli) November 11, 2022
அந்த ட்வீட்டில்,"கனவை நிறைவேற்றாமல் பாதியிலேயே இந்த ஆஸ்திரேலியாவில் இருந்து, ஏமாற்றம் நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறோம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ள கூடிய பல்வேறு தருணங்களை ஒரு அணியாக எடுத்துச்செல்கிறோம். சிறப்பான இடத்தை நோக்கி இங்கிருந்து புறப்படுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, மற்றொரு ட்வீட்டில்,"மைதானங்களில் எங்களை ஆதரித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஜெர்சியை அணிந்து நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் எப்போதும் பெருமைப்படுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி இந்த தொடர் முழுவதும் இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார். விளையாடிய 6 போட்டிகளில் 4 அரைசதங்களை குவித்து அசத்தினார். குறிப்பாக, நேற்றைய போட்டியிலும் விடாமல் முயன்று அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 296 ரன்களை குவித்த விராட், இத்தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரின் சராசாரி இந்த தொடரில் 98.66 ஆக உள்ளது. இதுதான் நடப்பு தொடரில் ஒரு பேட்டரின் உச்சபட்ச சரசாரியாகும். ஆனால், இந்த முறையும் விராட் கோலியின் அத்தனை போராட்டங்களும் வீணானது.
இந்தியா 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. அதன்பின்னர், ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழிந்தும், இரண்டாவது கோப்பையை அந்த அணியால் கைப்பற்ற முடியவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி தோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட்டிடம் விராட், ரோஹித் ஆகியோரின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"அதை தீர்மானிப்பதற்கு இது தகுந்த நேரமல்ல. அவர்களிடம் இன்னும் கிரிக்கெட் விளையாடும் திறன் நிறைந்திருக்கிறது" என்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 13) பாகிஸ்தான், இங்கிலாந்து அணி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ