பத்தாம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வராமல் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...
நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாணவர்களின் நலன் கருதி 10 ஆம் வகுப்பு (Class 10 Exams) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அறிவித்தார். இந்த முடிவை பாராட்டி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 11-ஆம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இரு வகுப்புகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்; 11-ஆம் வகுப்புக்கு ஒரே ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு நடத்தப்பட வேண்டியிருந்த நிலையில் அதை ரத்து செய்து விட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்று தமிழக அரசே எச்சரித்திருந்த நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு அனைவருக்கும் தேர்ச்சியளிக்க வேண்டும் என்று இன்று காலை தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து தேர்வுகளும் ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது ஆபத்தான சூழலில் தேர்வு எழுத வேண்டுமா? என அஞ்சிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது. பா.ம.க. கோரிக்கையை ஏற்று இம்முடிவை எடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
READ | தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து; அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு!!
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவால் அனைவரும் பயனடைவார்களே தவிர, யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதால் மேல்நிலை வகுப்புகளின் மாணவர் சேர்க்கையில் எந்த குழப்பமும் ஏற்படாது. இனி வரும் காலங்களில் பத்தாம் வகுப்பு தகுதியின் அடிப்படையில் பணிக்கு செல்வதில் எந்த சிக்கலும் ஏற்படாது. தமிழக அரசின் முடிவு அனைவருக்கும் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வராமல் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனிவரும் வகுப்புகளில் அவர்கள் சிறப்பாக படித்து சாதனைகளை படைப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.