தமிழக பட்ஜெட்டில் இடம்பெறாத 12 முக்கிய அம்சங்கள்: பட்டியலிட்ட ஓபிஎஸ்

ஒரு சாதாரண மனிதனின்‌ வாழ்க்கைத்‌ தரத்தில்‌ முன்னேற்றம்‌ ஏற்படுவதற்கு இந்த வரவு-செலவுத்‌ திட்டம்‌ எந்த வகையிலும்‌ பயன்படாது. மொத்தத்தில்‌, இந்த நிதிநிலை அறிக்கை ஒர்‌ ஏமாற்றமளிக்கும்‌ அறிக்கை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2022, 07:34 PM IST
  • இந்த பட்ஜெட், திமுக அரசு மக்களுக்கு எவ்வளவு துரோகம்‌ செய்திருக்கிறது என்பதைத்‌ தெளிவாகப்‌ படம்‌ பிடித்துக்‌ காண்பித்திருக்கிறது
  • மக்கள்‌ ஏமாற்றப்பட்டுவிட்டார்கள்‌ என்பது மட்டும்‌ உறுதியாகிறது
  • வாக்களித்த மக்களை வஞ்சிக்கும்‌ செயல்
தமிழக பட்ஜெட்டில் இடம்பெறாத 12 முக்கிய அம்சங்கள்: பட்டியலிட்ட ஓபிஎஸ்  title=

ஒரு சாதாரண மனிதனின்‌ வாழ்க்கைத்‌ தரத்தில்‌ முன்னேற்றம்‌ ஏற்படுவதற்கு இந்த வரவு-செலவுத்‌ திட்டம்‌ எந்த வகையிலும்‌ பயன்படாது. மொத்தத்தில்‌, இந்த நிதிநிலை அறிக்கை ஒர்‌ ஏமாற்றமளிக்கும்‌ அறிக்கை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழக பட்ஜெட் 2022-23 குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீசெல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை: 

நிதி மற்றும்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ இன்று தாக்கல்‌ செய்யப்பட்ட 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின்‌ ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுவது போல்‌ உள்ளதே தவிர, தமிழ்நாட்டு மக்களின்‌ நலன்களை காக்கும்‌ அறிக்கையாக, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்‌ அறிக்கையாக, ஏழையெளிய மக்களின்‌ எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்‌ அறிக்கையாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை, திமுக அரசு மக்களுக்கு எவ்வளவு துரோகம்‌ செய்திருக்கிறது என்பதைத்‌ தெளிவாகப்‌ படம்‌ பிடித்துக்‌ காண்பித்திருக்கிறது.

திமுகவின்‌ முக்கியத்‌ தேர்தல்‌ வாக்குறுதிகளான பெட்ரோல்‌, டீசல்‌ விலைக்‌ குறைப்பு, மாதம்‌ ஒரு முறை மின்‌ கட்டணம்‌ செலுத்தும்‌ முறை, கல்விக்‌ கட்டணம்‌ ரத்து, பொது விநியோகத்‌ திட்டத்தின் மூலம்‌ உளுத்தம்‌ பருப்பு மற்றும்‌ கூடுதல்‌ சர்க்கரை வழங்குவது, அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத்‌ திட்டம்‌, சமையல்‌ எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய்‌ மானியம்‌, அரசுத்‌ துறைகள்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களில்‌ 3.5 லட்சம்‌ காலியிடங்களை நிரப்புதல்‌ உள்ளிட்டவை குறித்து "நிதிநிலை அறிக்கையில்‌ ஏதும்‌ தெரிவிக்கப்படாதது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும்‌ செயலாகும்‌.

திமுகவின்‌ முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத்‌ தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள்‌ உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர்‌ அறிவுறுத்தி இருப்பதாகவும்‌, இதைப்‌ பெறத்‌ தகுதியுடையவர்கள்‌ யார்‌, யார்‌ என்பதைக் கண்டறியும்‌ பணி நடைபெற்று வருவதாகவும்‌, இதன்‌ அடிப்படையில்‌ இந்த அரசு எடுத்துவரும்‌ பல்வேறு முயற்சிகளின்‌ காரணமாக நிதிநிலையில்‌ முன்னேற்றம்‌ ஏற்படும்போது இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ என்றும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, மகளிர்‌ உரிமைத்‌ தொகைத்‌ திட்டம்‌ என்பது இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்பது தெளிவாகிறது. மாநில நிதிநிலை மேம்பட்டாலும்‌, நகைக்கடன்‌ தள்ளுபடி என்ற வாக்குறுதியைச் செயல்படுத்தியதுபோல்‌ ஒரு சிலருக்கு மட்டும்‌ அளித்துவிட்டு, தேர்தல்‌ வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக தம்பட்டம்‌ அடிக்கப்படும்‌ என்பதும்‌ தெள்ளத்‌ தெளிவாகிறது. இதன்‌ மூலம்‌ மக்கள்‌ ஏமாற்றப்பட்டுவிட்டார்கள்‌ என்பது மட்டும்‌ உறுதியாகிறது.

2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான முழு வரவு செலவுத்‌ திட்டத்திற்கு வலுவான அடித்தளம்‌ அமைப்பதே 2021-2022 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு செலவுத்‌ திட்டத்தின்‌ முதன்மை நோக்கமாகும்‌ என்று சென்ற ஆண்டு மேலாண்மை மற்றும் நிதித்‌துறை அமைச்சர்‌ தெரிவித்தார். அப்படி என்றால்‌, இந்த நிதிநிலை அறிக்கையிலே புதிதாக வருவாயைப்‌ பெறுவதற்கான வழிமுறைகள்‌ வகுக்கப்பட்டு இருக்க வேண்டும்‌, செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள்‌ உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்‌. ஆனால்‌, அப்படியொன்றும்‌ உருவாக்கப்பட்டதாகத்‌ தெரியவில்லை. 

சென்ற ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில்‌ "கனிமங்கள்‌ மற்றும்‌ சுரங்கங்களில்‌ ஏற்படும்‌ வருவாய்‌ இழப்பைச் சரி செய்ய அனைத்து முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்படும்‌. இதன் மூலம்‌, கனிமங்கள்‌ மற்றும்‌ சுரங்கங்களிடமிருந்து பெறப்படும்‌ ஒட்டுமொத்த வருவாய்‌ பெருமளவு அதிகரிக்கும்‌ என அரசு எதிர்பார்க்கிறது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால்‌, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்‌ இதுபற்றி ஏதும்‌ குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து வருவாயைப்‌ பெருக்க அரசு எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க | இந்த 1,000 ரூபாயையாவது கொடுங்கள்...தமிழக பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில்‌, "தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு தற்போதைய நிலைமை எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லநர்களைக்‌ கொண்ட உயர்‌ மட்டக்‌ குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்‌” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள்‌ கடந்த நிலையில்‌, குழு அமைக்கப்பட்டதாகக்‌ கூடத்‌ தெரியவில்லை. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்‌ அதுபற்றி ஏதும்‌ குறிப்பிடப்படப்படவே இல்லை, ஒருவேளை, மாநில கல்விக்‌ கொள்கையை மறந்துவிட்டதோ அரசு என்று மக்கள்‌ நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்‌.

சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில்‌, வேளாண்மை மற்றும்‌ வீட்டிற்கான இலவச மின்சாரம்‌, தமிழ்நாடு பின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ இழப்புகளுக்கு நிதி வழங்கவும்‌ 19,872.77 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால்‌ இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்‌ 19,297.52 கோடி ரூபாய்தான்‌ ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 575,25 கோடி ரூபாய்‌ குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மருத்துவம்‌ மற்றும்‌ குடும்ப நலத்‌ துறைக்காகச் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில்‌ 18,933 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்‌, இந்த ஆண்டு 17,901.73 கோடி ரூபாய்தான்‌ நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, 1,031.47 கோடி ரூபாய்‌ குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை எப்போது?..மகளிர் ஏமாற்றம்

சமூகப்‌ பாதுகாப்பை வலுப்படுத்துதல்‌ ' இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தின்‌ முக்கிய நோக்கங்களில்‌ ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களின்கீழ்‌ வழங்கப்படும்‌ முதியோர்‌ உதவித்‌ தொகைக்கு 4,816 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கும்‌ தமிழ்நாடு அரசு, திமுகவின்‌ தேர்தல்‌ வாக்குறுதியான முதியோர்‌ உதவித்‌ தொகை 1,500 ஆக உயர்த்தப்படும்‌ என்பது குறித்து வாய்‌ திறக்காதது சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களின்கீழ்‌ உதவித்‌ தொகை பெற்று வரும்‌ பயனாளிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌, இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும்‌, எதிர்காலம்‌ குறித்த எந்த தீர்க்கமான பார்வையும்‌ இல்லாமல்‌ இருக்கிறது. மக்கள்‌ நலனுக்கு என்று இந்த நிதிநிலை அறிக்கையில்‌ ஏதுமில்லை. ஒரு சாதாரண மனிதனின்‌ வாழ்க்கைத்‌ தரத்தில்‌ முன்னேற்றம்‌ ஏற்படுவதற்கு இந்த வரவு-செலவுத்‌ திட்டம்‌ எந்த வகையிலும்‌ பயன்படாது. மொத்தத்தில்‌, இந்த நிதிநிலை அறிக்கை ஒர்‌ ஏமாற்றமளிக்கும்‌ அறிக்கை’’.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022-23: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, முழு விபரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News