வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 40% அளவுக்கு குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. தனியார் மருந்து நிறுவனத்தின் வணிக நலனுக்காக பறவைகள் சரணாலய சுற்றளவை குறுக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என்பது 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஏரியை உள்ளடக்கி மொத்தம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்து உற்பத்தி ஆலை, பறவைகள் சரணாலயத்தின் உட்பகுதி வரை தமது ஆலையை விரிவாக்கம் செய்ய தீர்மானித்திருப்பதுடன், அதற்கான அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறது. இத்தகைய சூழலில் அந்த ஆலையின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைக்க அனுமதிக்கும்படி தேசிய விலங்குகள் நலவாரியத்திற்கு தமிழக வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் கடிதம் எழுதியிருப்பது தான் கவலையை அதிகரித்துள்ளது.
வேடந்தாங்கலுக்கு உலகின் பல நாடுகளில் இருந்து பறவைகள் மட்டும் வந்து செல்வதில்லை. அங்கு வரும் பறவைகளின் அழகை ரசிப்பதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றனர். தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வேடந்தாங்கலுக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக அழைத்து வரப்படுகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா மையமாக திகழும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை விரிவாக்க வேண்டுமே தவிர குறைக்க நினைக்கக் கூடாது. அவ்வாறு குறைத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் வராத பகுதியாக மாறி விடும்.
வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அங்குள்ள ஏரியில் மட்டும் தங்குவதில்லை. ஏரியைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மரங்களையும் தங்களின் உறைவிடமாகக் கொள்கின்றன. பறவைகள் சரணாலயப் பகுதியை குறைக்கும் போது, அதை சுற்றியுள்ள மரங்கள் தொழிற்சாலைகளாலும், அங்குள்ள மக்களால் விறகுக்காகவும் வெட்டி வீழ்த்தப்படும். அதனால் பறவைகள் தங்குவதற்கு இடம் இல்லாத நிலை உருவாகும். இது காலப்போக்கில் பறவைகள் வருகையை குறைத்து விடும்.
ஏற்கனவே, வேடந்தாங்கல் சரணாலயத்தை சுற்றியுள்ள வேளாண் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, அவற்றில் தொழிற்சாலைகளுக்காகவும், குடியிருப்புகளுக்காகவும் பிரமாண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. விளைநிலங்கள் அழிக்கப்படுவதால் விருந்தினராக வரும் பறவைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இந்த சூழலில் சரணாலய சுற்றளவை குறைப்பது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
பறவைகள் சரணாலயத்தை சுற்றி குறைந்தது 10 கி.மீ. சுற்றளவு பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக (Eco Sensitive Areas- ESA) அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், பெரும்பாலான சரணாலயங்களில் இந்த அளவுக்கு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உருவாக்கப்படவில்லை. அதுவே பெரும் குறையாக இருக்கும் போது பறவைகள் வாழ்வதற்காக உள்ள பகுதிகளை மருந்து ஆலைகளுக்கு தாரைவார்ப்பது நியாயமல்ல.
மருந்து ஆலைகளின் வளர்ச்சிக்காக நாம் இயற்கை வளங்களையும், பல்லுயிர் வாழிடங்களையும் பலி கொடுத்தால், அது இனிவரும் காலங்களில் கொரோனா போன்ற புதிய, புதிய நோய்கள் தோன்றவே வழி வகுக்கும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறுக்குவதற்காக தேசிய வனவிலங்குகள் நல வாரியத்திற்கு சுற்றுச்சூழல் துறை சார்பில் எழுதப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றார்.