தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் சங்கத்தேர்தலை மீண்டும் நடத்தவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்து எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார். மேலும் புதிய நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், தனி அதிகாரி நியமனம் சரி என்ற நீதிபதி உத்திரவை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுதினம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.