அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதியும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jan 28, 2017, 10:34 AM IST
அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு  title=

மதுரை: அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதியும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.
 
இதைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுக்க போலீஸார் அங்குள்ள வாடிவாசலுக்கு 'சீல்' வைத்தனர். இதனால் மாணவர்கள், இளைஞர்கள், உள்ளூர் மக்களுடன் கை கோர்த்து வாடிவாசல் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 

அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த இருந்த தடை விலகியதால் வரும் பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரிலும், பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக இரு கிராமங்களின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

வரும் 30-ம் தேதி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

Trending News